இயற்கை முறையில் தயாரிக்கப்படும் பழநி பஞ்சாமிர்தத்துக்கு புவிசார் குறியீடு: இனிக்கும் செய்தியால் பக்தர்கள் மகிழ்ச்சி

தமிழ் முரசு  தமிழ் முரசு
இயற்கை முறையில் தயாரிக்கப்படும் பழநி பஞ்சாமிர்தத்துக்கு புவிசார் குறியீடு: இனிக்கும் செய்தியால் பக்தர்கள் மகிழ்ச்சி

பழநி: பழநி பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். அறுபடை வீடுகளில் 3ம் படைவீடான பழநி தண்டாயுதபாணி கோயிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

பக்தர்களுக்கு பிரசாதமாக பஞ்சாமிர்தம் வழங்கப்படுகிறது. பழநி என்றவுடன் பக்தர்கள் மனதில் நினைவிற்கு வருவது பஞ்சாமிர்தம்.

மலைத்தேன், மலைவாழை, கரும்புச்சர்க்கரை, கற்கண்டு மற்றும் பேரிச்சம்பழம் போன்ற பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் பஞ்சாமிர்தம், பழநி முருகனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.

ரசாயன பொருட்கள் கலக்கப்படாமல் தயாரிக்கப்படும் இப்பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துவந்தனர். இதையடுத்து பழநி கோயில் இணை ஆணையர் செல்வராஜ் புவிசார் குறியீடு கேட்டு விண்ணப்பித்தார்.

பல்வேறு ஆய்வுகளுக்கு பின்னர் தற்போது பழநி கோயில் பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டிருப்பதாக புவிசார் குறியீடு அமைப்பின் துணை பதிவாளர் சின்னராஜா ஜி நாயுடு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுதொடர்பான விவரங்கள் விரைவில் புவிசார் குறியீடு அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையத்தில் வெளியிடப்பட உள்ளது. பழநி பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட உள்ளதால் பக்தர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கோயில் பிரசாதத்திற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும். இந்திய அளவில் திருப்பதி லட்டுக்கு ஏற்கனவே புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் சுமார் 200 பொருட்களுக்கு மேல் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இதில் விவசாயம் மற்றும் உணவு சார்ந்த 57 பொருட்கள் அடக்கம்.

புவிசார் குறியீட்டிற்கான சட்டம் 1999ல் இயற்றப்பட்டு, 2003ல் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது.

தமிழகத்தை பொறுத்தவரை தஞ்சாவூர் கலைத்தட்டு, காஞ்சிபுரம் பட்டு, நாச்சியார் கோயில் குத்துவிளக்கு, பவானி ஜமுக்காளம், சேலம் வெண்பட்டு வேஷ்டி, பத்தமடை பாய், தஞ்சை கலைத்தட்டு, மதுரை மல்லிகைப்பூ, சிறுமலை மலைவாழை, ஈரோடு மஞ்சள், சுவாமிமலை வெண்கலச் சிலை வார்ப்பு உள்ளிட்ட பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

இந்த வரிசையில் பழநி பஞ்சாமிர்தமும் சேர்ந்துள்ளது.

.

மூலக்கதை