புவி சுற்றுவட்டப்பாதையில் இருந்து விலகி நிலவை நோக்கி பயணத்தை தொடங்கிய சந்திரயான்-2

தமிழ் முரசு  தமிழ் முரசு
புவி சுற்றுவட்டப்பாதையில் இருந்து விலகி நிலவை நோக்கி பயணத்தை தொடங்கிய சந்திரயான்2

சென்னை: சந்திரயான்-2, புவி சுற்றுவட்டப் பாதையில் இருந்து விலகி நிலவை நோக்கி பயணத்தை தொடங்கியது. நிலவின் தென்துருவத்தை ஆராய்வதற்காக ஜி. எஸ். எல். வி மாக் 3 ராக்கெட் மூலம் சந்திரயான்-2 விண்கலத்தை இஸ்ரோ கடந்த மாதம் 22ம் தேதி விண்ணில் ஏவியது.

பூமியில் இருந்து புறப்பட்ட 16 நிமிடம் 24 விநாடிகளில் சந்திரயான்-2 விண்கலம் அதன் புவியின் சுற்றுவட்டப்பாதையில் திட்டமிட்டபடி நிலை நிறுத்தப்பட்டது.

இதையடுத்து, விண்கலத்தை திட்டமிட்ட உயரத்திற்கு படிப்படியாக உயர்த்தும் பணியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டு வந்தனர்.

இதற்கான பணிகள் பெங்களூரில் உள்ள இஸ்ரோ தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. இதையடுத்து, கடந்த 24ம் தேதி சந்திரயான்-2 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை முதல் முறையாக உயர்த்தப்பட்டது.

பின்னர், 26ம் தேதி 2வது முறையாகவும்,  29ம் தேதி 3 வது முறையும், கடந்த 2ம் தேதி 4வது முறையாக சந்திரயான்-2 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை உயர்த்தப்பட்டது.

தொடர்ந்து 4வது நிலையில் சுற்றிவந்த சந்திரயான்-2 விண்கலத்தில் உள்ள விக்ரம் லேண்டர் எல். ஐ. 4 என்ற அதிநவீன கேமரா மூலம் புவியின் மேற்பரப்பை படம் பிடித்து அனுப்பியது.   இந்தநிலையில், கடந்த 6ம் தேதி 5வது முறையாக விண்கலத்தின் புவிசுற்றுவட்டப்பாதை திட்டமிட்டப்படி உயர்த்தப்பட்டது.

இதையடுத்து, 6வது நிலைக்கு 14ம் தேதி(இன்று) சந்திரயான்-2 விண்கலம் உயர்த்தப்படும் என இஸ்ரோ தனது இணையதள பக்கத்தில் தெரிவித்திருந்தன.
அதன்படி சந்திரயான்-2 விண்கலம் இன்று அதிகாலை பூமியின் சுற்றுவட்டப் பாதையில் இருந்து விலகி, நிலவை நோக்கி வெற்றிகரமாக பயணிக்க தொடங்கியது.

இன்று அதிகாலை 3. 30 மணிக்கு திட்டமிட்டதற்கு முன்கூட்டியே நிலவை நோக்கி செல்கிறது. சவாலான இப்பணியை இஸ்ரோ விஞ்ஞானிகள் வெற்றிகரமாக செய்துள்ளனர்.

சந்திரயான்-2 விண்கலம் ஆர்பிட்டர், லேண்டர், ரோவர் ஆகிய 3 கலன்களுடன் மொத்தம் 3,850 கிலோ எடை கொண்டது.

விண்ணில் ஏவப்பட்ட பிறகு, இந்த விண்கலம் ஏற்கனவே 5 மாற்றங்களைக் இதுவரை கண்டுள்ளது. மேலும் சந்திரயான் இன்று அதிகாலை 2. 21 மணிக்கு மிக முக்கிய மாற்றமான பூமியின் சுற்று வட்டப் பாதையில் இருந்து விலகி, நிலவை நோக்கி வெற்றிகரமாக பயணிக்க தொடங்கியது.

நிலவின் சுற்றுவட்டப் பாதையை வரும் 20ம் தேதி சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பின்னர் செப்டம்பர் 7ம் தேதி நிலவின் தென் பகுதியில் முதல் முயற்சியிலே தரையிறங்கி தனது ஆய்வை துவங்கும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

.

மூலக்கதை