ரூ1000க்கு பெண் குழந்தை விற்பனை: தாய் கைது

தமிழ் முரசு  தமிழ் முரசு
ரூ1000க்கு பெண் குழந்தை விற்பனை: தாய் கைது

திருமலை: குழந்தையை ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்ய முயன்ற தாயை கைது செய்தனர். தெலங்கானா மாநிலம் வாரங்கல் பஸ் நிலையத்தில் சுமார் 23 வயதுள்ள இளம்பெண், அழுக்கு படிந்த துணிகளுடன் காணப்பட்டார்.

அவரது மடியில் 7 மாத அழகான பெண் குழந்தை இருந்தது. திடீரென அந்த பெண், குழந்தை யாருக்காவது வேண்டுமா? இதன் விலை ரூ. 1000 என்று கூறினார்.

இதையறிந்த பயணிகள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். அப்போது அந்த பெண், எனது கணவர் என்னிடம் அடிக்கடி தகராறு செய்கிறார்.

இதனால் இந்த குழந்தையை என்னால் வளர்க்க முடியவில்லை. எனவே யாராவது வாங்கிக்கொள்ளுங்கள் என்று கெஞ்சியபடியும், கண்ணீர் விட்டபடியும் கூறினார்.இதனால் அதிர்ச்சி அடைந்தவர்கள் சிலர் அந்த பெண்ணுக்கு ஆறுதல் கூறி குழந்தையை விற்க வேண்டாம் என்றனர். இதற்கிடையில் சிலர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

வாரங்கல் போலீசார் மற்றும் குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். குழந்தையுடன் இளம்பெண்ணை மீட்டு விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அந்த பெண் தெலங்கானா மாநிலம், ஜெனகாமா மாவட்டம், பெம்பர்த்தி கிராமத்தை சேர்ந்தவர். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன் திருமணமாகியுள்ளது.

குழந்தைக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் கடந்த 20 நாட்களாக வாரங்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் வழக்கம்போல் கணவர் தன்னிடம் தகராறு செய்வதாக அப்பெண் கூறியுள்ளார்.

இதையடுத்து குழந்தையை மீட்ட, குழந்தைகள் நல அலுவலர்கள், அதை பாதுகாப்புக்காக அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர். அப்பெண்ணை அவரது வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து குழந்தைகள் நல அலுவலர்கள் கூறுகையில், ‘’தம்பதி இடையே ஏற்பட்ட தகராறில் சம்பவம் நடந்துள்ளது.

2 அல்லது 3 மாதம் அவர்கள் சேர்ந்து வாழ்ந்தபிறகு குழந்தையை ஒப்படைப்பது குறித்து ஆலோசிப்போம்’’ என்றனர்.

.

மூலக்கதை