முதல்வர் திறந்துவைத்து 50வது நாளில் மல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுகம் தரைத்தளம் உடைந்து கடலில் விழுந்தது

தமிழ் முரசு  தமிழ் முரசு
முதல்வர் திறந்துவைத்து 50வது நாளில் மல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுகம் தரைத்தளம் உடைந்து கடலில் விழுந்தது

சேதுபாவாசத்திரம்: மல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தின் தரைத்தளம் உடைந்து கடலில் விழுந்ததால் மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினத்தில் பழைய மீன்பிடி துறைமுகத்தை இடித்து அப்புறபடுத்தி விட்டு ரூ60 கோடியில் புதிய துறைமுகம் கட்டப்பட்டது.

950 மீட்டரில் 2 படகு அணையும் துறை, படகு பழுது பார்க்கும் தளம், நிர்வாக அலுவலக கட்டிடம், 2 மீன் ஏலக்கூடங்கள், 2 வலை பின்னும் கூடங்கள், 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 2 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள், வாகன போக்குவரத்துக்காக சிமென்ட் சாலைகள், மழைநீர் வடிகால், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், படகு இறங்குதளம் என பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டது.

இதன் திறப்பு விழா கண்ட 50வது நாளான நேற்று துறைமுகத்தில் வாகனங்கள் வந்து செல்லும் தரைத்தளத்தின் ஒரு பகுதி இடிந்து கடலுக்குள் விழுந்தது. இதை ஒப்பந்ததாரர்கள் அவசர அவசரமாக செப்பனிட்டு வருகின்றனர்.

இதுகுறித்து விசைப்படகு மீனவர் பேரவை மாநில பொதுச்செயலாளர் தாஜூதீன் கூறும்போது, ‘‘மல்லிப்பட்டினத்தில் ஒன்றரை மாதத்திற்கு முன் தமிழக முதல்வரால் திறக்கப்பட்ட துறைமுகம் தரமற்ற முறையில் கட்டப்பட்டடுள்ளதை மீனவர் சங்கம் பல முறை அறிவுறுத்தியும் நிலையை மாற்றாமல் கட்டினர். தற்போது தரைத்தளத்தின் ஒரு பகுதி இடிந்து  கடலில் விழுந்துவிட்டது.

இதை அவசர அவசரமாக சரி செய்கின்றனர். படகு ஏற்றி இறக்கும் தளமும் பயன்படாமல் இருந்து வருகிறது.

உலக வங்கி நிதியுதவியுடன் கட்டி தரப்பட்ட துறைமுகம், தரம் குன்றி மழையோ, அலை கடல் சீற்றமோ இல்லாத நிலையில் இடிந்து விழுந்து விட்டது. இதற்கு யார் பொறுப்பு என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும்.

மழைக்கு முன்பாக துறைமுகத்தை சீரமைக்க வேண்டும்’ என்றார்.

.

மூலக்கதை