சுதந்திர தின விழாவில் இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்கி கவுரவிக்கிறது மத்திய அரசு..!

தினகரன்  தினகரன்
சுதந்திர தின விழாவில் இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்கி கவுரவிக்கிறது மத்திய அரசு..!

டெல்லி: சுதந்திர தின விழாவில் இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்கி மத்திய அரசு கவுரவிக்கிறது. கடந்த பிப்ரவரி 14ம் தேதி பாகிஸ்தான் நாட்டின் தீவிரவாத அமைப்பினர் நடத்திய தற்கொலை தாக்குதலில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் 40 வீரர்கள் பலியானார்கள். இதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத அமைப்பின் பயிற்சி முகாம் மீது பிப்ரவரி 26-ம் தேதி இந்தியா தாக்குதல் நடத்தியது. இந்திய வான் பகுதியில் அத்துமீறி நுழைய முயன்ற பாகிஸ்தான் போர் விமானத்தை, இந்திய விமான படையின் போர் விமானம் சுட்டு வீழ்த்தியது. அந்த விமானத்தை விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமான் செலுத்தினார். அவர் பாகிஸ்தான் ஆயுத படையினால் பிடிக்கப்பட்டார். சர்வதேச அளவில் எழுந்த கடுமையான நிர்ப்பந்தங்களால் 1ம் தேதியன்று அபிநந்தனை பாகிஸ்தான் விடுவித்தது. அபிநந்தன் மோசமான சூழ்நிலைகளிலும் முகத்தில் மிகுந்த நம்பிக்கையையும் உறுதியையும் காட்டினார். இதனால் நாட்டு மக்கள் அனைவரின் மனதிலும் அவர் இடம் பிடித்துள்ளார். இதையடுத்து அபிநந்தனுக்கு டெல்லியிலுள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சையும், உளவியல் ரீதியான ஆலோசனையும் வழங்கப்பட்டது. இந்நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக ஸ்ரீநகர் விமானப்படை பிரிவில் இருந்து, மேற்கு பிராந்திய விமானப்படை பிரிவுக்கு, அபிநந்தன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும், அவருக்கு வீர் சக்ரா விருது வழங்க வேண்டும் என, மத்திய அரசுக்கு விமானப் படை பரிந்துரை செய்தது. இந்நிலையில்  சுதந்திர தின விழாவில் இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்கி மத்திய அரசு கவுரவிக்கிறது. போர்க்களத்தில் சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கு வீர் சக்ரா வழங்கப்படுகிறது. சுதந்திர தினமான நாளை அபிந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்கப்படுகிறது. விங் கமான்டர் அபிநந்தன் சென்னையை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை