அமெரிக்கா- சீனா வர்த்தகப் போரால் மீண்டும் ஒரு பொருளாதார நெருக்கடி வரலாம்: மார்கன் ஸ்டான்லி எச்சரிக்கை

தினகரன்  தினகரன்
அமெரிக்கா சீனா வர்த்தகப் போரால் மீண்டும் ஒரு பொருளாதார நெருக்கடி வரலாம்: மார்கன் ஸ்டான்லி எச்சரிக்கை

அமெரிக்கா: அமெரிக்கா- சீனா வர்த்தகப் போரால் மீண்டும் ஒரு பொருளாதார நெருக்கடி வரலாம் என முதலீட்டு வங்கியான மார்கன் ஸ்டான்லி கூறியுள்ளது. 2008 ஆம் ஆண்டில் தவறான முதலீடுகளால் அமெரிக்காவின் பங்குசந்தை வீழ்ச்சியடைந்தது. இதனால் அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி அப்படியே ஐரோப்பிய நாடுகள் முழுவதும் பரவியது. பின்னர் ஆசியாவிலும் பல நாடுகள் பாதிக்கப்பட்டன. இதன் விளைவாக பல பெரிய நிறுவனங்களும் வங்கிகளும் திவாலாகின. இதனால் கோடிக்கணக்கான மக்கள் வேலைகளையும் தங்கள் சொத்துக்களையும் இழந்தனர்.இது உலகப்பொருளாதார நெருக்கடி என்று வரலாற்றில் குறிக்கப்படுகிறது. அதேபோன்ற ஒரு நெருக்கடி மீண்டும் விரைவில் ஏற்படலாம் என்று முதலீட்டு வங்கியான மார்கன் ஸ்டான்லி தற்போது அச்சம் தெரிவித்துள்ளது. அமெரிக்கா- சீனா இடையிலான வர்த்தகப்போர் இப்படியே தொடர்ந்தால் பங்குச்சந்தையின் வீழ்ச்சி மோசமாக இருக்கும். அது மீண்டும் ஒரு உலகப்பொருளாதார நெருக்கடிக்கு காரணமாகலாம் என்று மார்கன் ஸ்டான்லியின் கணிப்பாக பார்க்கப்படுகிறது. தங்கம் விலை உயர்வது, கடன் பத்திரங்களின் விலை குறைவது பங்குச்சந்தைகள் வீழ்ச்சி ஆகியவற்றை வைத்து மீண்டும் அமெரிக்கா- சீனா நாடுகள் வரி அதிகரிப்பில் ஈடுபட்டால் 9 மாதங்களில் புதிய பொருளாதார நெருக்கடி உலகைத் தாக்கக்கூடும் என மார்கன் ஸ்டான்லி கணித்துள்ளது. உள்நாட்டு பொருளாதார நெருக்கடியால் பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகள் இப்போதே பாதிப்பை சந்திக்க தொடங்கியுள்ளது. பிராக்சட் பிரச்சனையில் ஏற்கனவே வெடிபதுங்கம் பிரிட்டனுக்கு பொருளாதார நெருக்கடி அடுத்த பெரிய தலைவலியாக உள்ளது. இந்நிலையில் உலகப்பொருளாதார நெருக்கடியும் ஏற்பட்டால் பிரிட்டன் தான் அதனால் மோசமாக பாதிக்கப்படும் நாடக இருக்கும் என்று  மார்கன் ஸ்டான்லி கருத்து தெரிவித்துள்ளது. இந்தியாவை பொறுத்தவரை பொருளாதார நெருக்கடியின் நேரடி பாதிப்புகள் இங்கே இருக்காது என்றாலும் வேலை இழப்புகளை இந்தியர்கள் சந்திக்க நேரும் என கூறப்படுகிறது. தற்போது வாகன விற்பனையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி, ஆட்டோ மொபைல் துறையில் ஏற்பட்டுள்ள வேலை இழப்புகள் போன்ற விரும்பதகாத சம்பவங்கள் அப்போது இன்னும் அதிகரிக்கும். பொருளாதார நெருக்கடியை குறைக்க மிகச்சிறந்த வழியாக மத்திய வங்கிகள் தங்களின் கடன் வட்டி விகிதங்களை குறைப்பது பார்க்கப்படுகிறது. இந்திய ரிசர்வ் வங்கி தனது ரெப்போ வட்டி விகிதத்தை சமீபத்தில் 0.35 சதவீதம் குறைத்தது போலவே, தாய்லாந்தின் மத்திய வங்கி தனது கடன் வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைத்துள்ளது. நியூசிலாந்தின் மத்திய வங்கியோ கடன் வட்டி விகிதத்தை 0.5 சதவீதம் என்ற விகிதத்தில் அதிரடியாக குறைத்துள்ளது. இப்படியாக உலகநாடுகள் பொருளாதார நெருக்கடியை சந்திக்க தயாராகி வந்தாலும் தேவையற்ற இழப்புகள் தவிர்க்கப்பட வேண்டும். அமெரிக்கா- சீனா இடையிலான வர்த்தகப்போர் முடிவுக்கு வரவேண்டும் என்பது தான் உலகநாடுகள் மற்றும் தொழில்துறையினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

மூலக்கதை