வீட்டிலேயே முதல் நாள் முதல் காட்சி : தியேட்டர் உரிமையாளர்கள் அலறல்

தினமலர்  தினமலர்
வீட்டிலேயே முதல் நாள் முதல் காட்சி : தியேட்டர் உரிமையாளர்கள் அலறல்

தியேட்டர்களில், திரைப்படங்கள் வெளியாகும் அதே நாளில், வீட்டிலிருந்த படியே, பிரீமியம் ஜியோ பைபர் இணைப்பு வைத்திருப்பவர்கள் பார்க்கலாம் என, முகேஷ் அம்பானி, இருதினங்களுக்கு முன் அறிவித்தார். இதையடுத்து, திரையரங்குகளை நடத்தும் நிறுவனங்கள், அதிர்ந்து போயுள்ளன.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர், முகேஷ் அம்பானி, மும்பையில் நடைபெற்ற ஆண்டு பொதுக் கூட்டத்தில் பேசும்போது, ஜியோ பைபர் பிரீமியம் வாடிக்கையாளர்கள், புதிய திரைப்படங்களை, திரையரங்குகளில் வெளியாகும் அன்றே, வீட்டிலிருந்தபடியே பார்க்கலாம் என, அறிவித்தார்.

இந்த, முதல் நாள் முதல் காட்சி அறிவிப்பால், பி.வி.ஆர்., ஐநாக்ஸ் லீஷர் ஆகிய நிறுவனப் பங்குகள், நேற்று சந்தை ஆரம்பித்ததும், 10 சதவீதம் அளவுக்கு சரிவை சந்தித்தன. காரணம், திரையரங்குகளின் எதிர்காலம் குறித்த முதலீட்டாளர்களின் அச்சமே.

இந்நிலையில், நாட்டில், 800 திரையரங்குகளை நடத்தி வரும், பி.வி.ஆர்., நிறுவனம், திரையரங்கில் பார்ப்பது; வீட்டில் பார்ப்பது இரண்டும் வெவ்வேறு அனுபவங்களாகும். இரண்டுக்கும் அதற்கான இடங்கள் இருக்கின்றன. பல ஆண்டுகளாக இரண்டும் தனித்தனியே நடை போட்டு வருகின்றன. எதிர்காலத்திலும் அப்படியே இருக்கும் என, தெரிவித்துள்ளது. திரையரங்குகளில் படத்தை வெளியிடும் முறையைத் தான், வெளிநாடுகள் பலவும் பின்பற்றுகின்றன. இதன் மூலமாகவே, துறையின் வலுவான நிதித் தன்மை உறுதி செய்யப்பட்டு வருகிறது.

இருப்பினும், திரைப்படத்தை எந்த தளத்தில் வெளியிட வேண்டும் என்பது, தயாரிப்பாளர் கையில் தான் உள்ளது என ஐநாக்ஸ் தெரிவித்துள்ளது. ஐநாக்ஸ் நிறுவனம், 600 திரையரங்குகளுக்கு மேல் நிர்வகித்து வருகிறது.

இதற்கிடையே, ஜியோ பைபர் வருகையால் டைரக்ட் டு ஹோம் எனும் டி.டி.எச்.,சேவை பிரிவும் மிகவும் பாதிப்படையலாம் என, பேங்க் ஆப் அமெரிக்கா மெரில் லிஞ்ச் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. ஆக, ஜியோ பைபர் வரும்போதே, சலசலப்புடன் வருகிறது.

மூலக்கதை