குத்தாட்டம்... கொண்டாட்டம்... - விஜயலட்சுமி ஆவல்

தினமலர்  தினமலர்
குத்தாட்டம்... கொண்டாட்டம்...  விஜயலட்சுமி ஆவல்

மின்னும் பொன்னில் வடித்த பொற்சிலையோ எந்நாளும் ஒளி மங்கா வெண் நிலவே... இவர் சிரிப்பில் இளசுகளின் இன்னல் தீருமோ... இவர் விழி அழகில் பூவுலகு மயங்குமோ... என கவி பாட தோன்றும் அழகுப் பதுமை தான் சென்னை 28 படத்தின் நாயகி நடிகை விஜயலட்சுமி. தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக அவர் மனம் திறந்ததாவது...

டும்...டும்...டும்... சீரியல் குறித்து?
இந்த சீரியலில் என் கதாபாத்திரம் பிடித்திருக்கிறது. டில்லியில் டிவி சேனலில் பணிபுரியும் பெண், திடீர்னு சொந்த ஊர் திருநெல்வேலி வருகிறார். அங்கு கல்யாண ஏற்பாடுகள் நடக்கின்றன. பிடிக்காத கல்யாணம் நடக்குதா இல்லையாங்கறது தான் இந்த சீரியல்.

சின்னத்திரை -பெரிய திரை எப்படி?
சின்னத்திரையில் ரிலாக்ஸாக வேலை செய்யலாம். நிறைய டயலாக்குகள் பேச வேண்டி இருக்கும். சினிமாவை விட ரீச் அதிகம் ஆகலாம். எல்லோரது வீட்டிற்கும் போகும் ஒரு உணர்வு கிடைக்கிறது. சீரியலை பார்க்கும் போது மக்கள் அவர்களது வீட்டு பொண்ணாக நினைக்கிறாங்க.

மீண்டும் சினிமா வாய்ப்பு?
சீரியல்கள் பல ஓடிக் கொண்டிருக்கின்றன. சினிமா வாய்ப்பு கிடைத்தாலும் விடுவதில்லை. சிம்புதேவன் இயக்கத்தில் கசடதபற என்ற சினிமாவில் நடித்து வருகிறேன். சத்துணவில் வேலை செய்யும் பெண் கதாபாத்திரம். சண்டைக் காட்சியில் டூப் இல்லாமல் நடித்திருக்கிறேன். மேக்கப் இல்லாத என்னை பார்க்கலாம்.

உங்க பையன்?
நிலன்! 2 வயது 2 மாசமாச்சு. ரொம்ப துறுதுறு என இருக்கான்.

பிக்பாஸ் அனுபவம்?
இந்த ஷோவிற்கு போறதுக்கு முன்னால் பலரும் பயமுறுத்தினர். வீட்டில் எப்படி கேமரா இல்லாமல் இருப்பேனோ... அதுபோல அங்கு கேமராவோட இருந்தேன்... அவ்வளவுதான். அங்கு நெருக்கமான நட்பு கிடைக்கவில்லை. நான் வைல்டு கார்டு மூலம் தாமதமாக சென்றேன். எல்லோருமே பகையாக தான் பார்த்தாங்க. ஏற்கனவே அவர்கள் குழு அமைத்து இருந்தனர். அதனால் யாருமே என் கூட நெருக்கமாக இல்லை. நானும் அதை எதிர்பார்க்கவில்லை.

கணவர் பெரோஷ் இயக்கத்தில் நடிப்பது எப்போது?
கலக்கல் குத்துப் பாட்டு இருந்துச்சுன்னா சொல்லுங்க, நான் பண்றேன்னு சமீபத்துல அவரிடம் வாய்ப்பு கேட்டேன். அவர் இயக்கும் படத்தில் ஒரு டான்ஸ் ஆட ரொம்ப ஆவல். வாய்ப்பு கொடுப்பார் என நம்புகிறேன்.

இயக்குனர் வெங்கட் பிரபு குழுவில் யாரு ரொம்ப கலாய்ப்பாங்க?
என்னை கழுவிக் கழுவி ஊத்துவது நடிகர் சிவாதான். எல்லோரிடமும் கலாட்டா செய்வார். வாயை மூடவே மாட்டார். சென்னை 28 பார்ட்-1 ல் எல்லோரும் சேர்ந்து கலாய்ச்சாங்க. புதுசு என்பதால் அமைதியாக இருந்தேன். பார்ட்-2ல் ஒருத்தரும் என்னை நெருங்கவே இல்லை.

பிட்னஸ் ரகசியம்?
சினிமாத் துறையில் உடம்பை கச்சிதமாக வைக்க வேண்டியது முக்கியம். உடல் நலத்தில் அதிக அக்கறை செலுத்துவேன். உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு என ரொம்ப கவனமாக இருக்கிறேன். அல்வா, பிரியாணி ரொம்ப பிடிக்கும். ஆனால் அதுவும் அளவு தான்.

சிறந்த நடிகை?
நயன்தாரா தான். லேடி சூப்பர் ஸ்டார்னு சும்மா யாரும் சொல்லவில்லை. அந்தளவிற்கு அதிக ஈடுபாடு, கடின உழைப்பு அவரிடம் உண்டு. அவர் மீது மரியாதை உண்டு.

பிடித்த ஹீரோ?
நடிகர் தனுஷ் ரொம்ப பிடிக்கும்.

மூலக்கதை