கலைமாமணி விருதைப் புறக்கணித்தார்களா விஜய் சேதுபதி, யுகபாரதி ?

தினமலர்  தினமலர்
கலைமாமணி விருதைப் புறக்கணித்தார்களா விஜய் சேதுபதி, யுகபாரதி ?

தமிழ்நாட்டில் கலைத்துறையில் சாதனை புரிபவர்களுக்கு கலைமாமணி விருது வழங்கி கௌரவிக்கப்படுவது வழக்கம். 2011 முதல் 2019 வரையில் கலைமாமணி விருதுக்காக தேர்வு பெற்றவர்களை சில மாதங்களுக்கு முன்பு தமிழக அரசு அறிவித்தது.

அதன்படி நேற்று சென்னையில் நடைபெற்ற விழாவில் 201 பேருக்கு கலைமாமணி விருதை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். நிகழ்ச்சியில் சபாநாயகர் தனபால், அமைச்சர் பெருமக்கள் மற்றும் கலைத்துறையினர் பெருமளவில் கலந்து கொண்டார்கள்.

நேற்றைய நிகழ்வில் நடிகர் விஜய் சேதுபதி, பாடலாசிரியர் யுகபாரதி, பிரபுதேவா உள்ளிட்ட பலர் கலந்து கொள்ளவில்லை. அவர்கள் விழாவைப் புறக்கணித்ததாக தகவல்கள் வெளியாகின.

ஆனால், விஜய் சேதுபதி படப்பிடிப்பை முடித்துக் கொண்டு விழா அரங்கிற்கு செல்வதற்குள் நிகழ்ச்சி முடிந்துவிட்டதாம். அதனால், இயல் இசை நாடகமன்றத் தலைவர் தேவாவிடம் விருதைப் பெற்றுக் கொண்டாராம்.

பாடலாசிரியர் யுகபாரதியை நேற்று முன்தினம் தொடர்பு கொண்டு விழாவுக்கான அடையாள அட்டை, அனுமதி சீட்டு ஆகியவற்றை உடனடியாக வந்து பெற்றுக் கொள்ளும்படி சொன்னார்களாம். அப்போது அவர் வெளியூரில் இருந்ததால் வர முடியாது வேறு ஒருவரை அனுப்புகிறேன் கொடுத்துவிடுங்கள் என்றாராம்.

ஆனால், அவர்தான் நேரில் வர வேண்டும், அதுவும் ஒரு மணி நேரத்திற்குள் வர வேண்டும் என்று உறுதியாகச் சொல்லிவிட்டார்களாம். வெளியூரிலிருந்து எப்படி போய் அப்படி ஒரு மணி நேரத்தில் பெற்றுக் கொள்ள முடியும் அதனால் அதை வாங்கவுமில்லை, விழாவில் பங்கேற்கவுமில்லை என யுகபாரதி தெரிவித்துள்ளார்.

மூலக்கதை