தன்ஷிகாவுக்கு லாபத்தில் பங்கு

தினமலர்  தினமலர்
தன்ஷிகாவுக்கு லாபத்தில் பங்கு

புறம்போக்கு என்கிற பொதுவுடமை படத்திற்கு பிறகு எஸ்.பி.ஜனநாதன் இயக்கும் படம் லாபம். இதனை விஜய்சேதுபதி தயாரித்து, நடிக்கிறார். ஸ்ருதி ஹாசன் ஹீரோயின். ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார். இமான் இசை அமைக்கிறார். இதன் படப்பிடிப்புகள் மதுரை, பழனி பகுதியில் நடந்து வருகிறது. இந்த நிலையில் இந்தப் படத்தில் சாய் தன்ஷிகா முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். ஏற்கெனவே ஜனநாதன் இயக்கத்தில் பேராண்மை படத்தில் நடித்தவர் சாய் தன்ஷிகா. தற்போது லாபம் படத்தில் நடிப்பது குறித்து அவர் கூறியதாவது:

இப்படத்தில் நான் நடிக்க வேண்டும் என்று ஜனநாதன்சொல்லவும், கதையே சொல்ல வேண்டாம் என்றேன். ஏனென்றால் அவர் மீது எனக்கு அத்தகைய நம்பிக்கை. சினிமாவிற்கான அரிச்சுவடியைக் கற்றுக் கொண்டதே அவரிடம் இருந்து தான். பேராண்மை படத்தில் எப்படி ஒரு மாணவி போல அவரிடம் கற்றுக்கொண்டேனோ அதேபோல் லாபம் படத்திலும் கற்று வருகிறேன்.

ஜனநாதன் படங்கள் வெறும் கமர்சியல் அம்சத்தோடு நின்று விடுவதில்லை. அதைத் தாண்டிய சமூக சிந்தனை இருக்கும். லாபமும் அப்படியான படம் தான். விவசாயிகளின் வாழ்நிலையை பேசுவதோடு, வெள்ளையர்கள் காலத்தில் இருந்து நம் விவசாய மக்களின் உழைப்பு எப்படியெல்லாம் சுரண்டப்படுகிறது என்பதை படம் அழுத்தமாகப் பேசுகிறது. அன்று விவசாயிகளுக்கு எதிராகப் போடப்பட்ட விதை இன்று வரையிலும் எப்படி வளர்ந்துள்ளது என்பதை மிக அற்புதமாக படம் பேசும். என்கிறார் தன்ஷிகா.

மூலக்கதை