கொஞ்சம் அசந்தா போதும்!பார்க்கிங் பணத்துல பங்களா கட்டிருவாங்க

தினமலர்  தினமலர்
கொஞ்சம் அசந்தா போதும்!பார்க்கிங் பணத்துல பங்களா கட்டிருவாங்க

கோவை:கோவை, டவுன்ஹால், ராஜவீதி மற்றும் டி.கே.மார்க்கெட் வாகன நிறுத்துமிடங்களில், மாநகராட்சி நிர்ணய கட்டணத்தை விட, அதிகமாக வசூலிக்கின்றனர். நடவடிக்கை எடுக்க வேண்டிய, வருவாய் பிரிவினர் வேடிக்கை பார்க்கின்றனர்.
கோவையில் உள்ள பஸ் ஸ்டாண்டுகள் மற்றும் நகரின் முக்கிய இடங்களில் மாநகராட்சி சார்பில், வாகன நிறுத்துமிடங்கள் நடத்தப்படுகின்றன. சைக்கிள் நிறுத்த ரூ.2, இரு சக்கர வாகனம் ரூ.5, கார் நிறுத்த ரூ.10 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. கிராஸ்கட் ரோடு வாகன நிறுத்துமிடத்தில், 3 மணி நேரம் நிறுத்த, இக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மற்ற இடங்களில், 6 மணி நேரத்துக்கு வசூலிக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.ஆனால், டவுன்ஹால் வாகன நிறுத்துமிடத்தில், கார் நிறுத்த ஒரு மணி நேரத்துக்கு ரூ.15 வசூலிக்கப்படுகிறது.
கொடுக்கப்படும் ரசீதில், தொகை அச்சிட்டுள்ள இடத்தில், கருப்பு நிற ஸ்கெட்ச்சால் நேரத்தை குறிப்பிட்டு, மறைத்து விடுகின்றனர்.அதனால், மாநகராட்சி நிர்ணயித்த தொகை எவ்வளவு என, வாகன ஓட்டிகளுக்கு தெரிவதில்லை. ரசீதில், 24 மணி நேரத்துக்கு, 80 ரூபாய் என, குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், 6 மணி நேரத்துக்கே, 90 ரூபாய் வசூலிக்கின்றனர்.சுற்றுப்பகுதியில் உள்ள ஜவுளி நிறுவனங்களுக்கு, ஏராளமானோர் வாகனங்களில் வருகின்றனர். வாகனம் நிறுத்த போதிய வசதி இல்லாததை பயன்படுத்தி, கூடுதலாக வசூலிக்கின்றனர். இவ்வாறு தினமும் பல ஆயிரம் ரூபாய், மக்கள் பணத்தை கொள்ளையடிக்கின்றனர்.
வாகன நிறுத்த கட்டணம் எவ்வளவு, ஒப்பந்ததாரர் பெயர், கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகார் தெரிவிக்க வேண்டிய எண் மற்றும் முகவரியுடன், அறிவிப்பு பலகை வைக்க வேண்டும். இப்பலகை எங்குமே இல்லை. களஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டிய, மாநகராட்சி வருவாய் பிரிவினரோ கண்டுகொள்வதேயில்லை.மாநகராட்சி கமிஷனர் ஷ்ரவன்குமாரிடம் கேட்டபோது,
''இது குறித்து ஏற்கனவே புகார் வந்துள்ளது. பஸ் ஸ்டாண்டுகளில் உள்ள வாகன நிறுத்துமிடங்களிலும், கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் வந்துள்ளது. அனைத்து நிறுத்தங்களையும், ஆய்வு செய்ய சொல்கிறேன்,'' என்றார். நடவடிக்கை எடுத்தால் மட்டும் போதாது. எடுத்த நடவடிக்கை குறித்து, பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

அத்துடன், மாநகராட்சி நிர்ணயித்த கட்டணம் மற்றும் புகார் தெரிவிக்க வேண்டிய போன் எண்களை குறிப்பிட்டு, வாகனம் நிறுத்துமிடங்களில் அறிவிப்பு பலகையும் வைக்க வேண்டும்.கொடுக்கப்படும் ரசீதில், தொகை அச்சிட்டுள்ள இடத்தில், கருப்பு நிற ஸ்கெட்ச்சால் நேரத்தை குறிப்பிட்டு, மறைத்து விடுகின்றனர். அதனால், மாநகராட்சி நிர்ணயித்த தொகை எவ்வளவு என, வாகன ஓட்டிகளுக்கு தெரிவதில்லை. ரசீதில், 24 மணி நேரத்துக்கு, 80 ரூபாய் என, குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், 6 மணி நேரத்துக்கே, 90 ரூபாய் வசூலிக்கின்றனர்.

மூலக்கதை