வானமே கூரை! அரசு பள்ளியில் மாணவர்களுக்கு வகுப்பறை:சாதனை பள்ளிக்கு வந்த பெருஞ்சோதனை

தினமலர்  தினமலர்
வானமே கூரை! அரசு பள்ளியில் மாணவர்களுக்கு வகுப்பறை:சாதனை பள்ளிக்கு வந்த பெருஞ்சோதனை

திருப்பூர்:போதிய வகுப்பறை வசதி இல்லாததால், 500 பள்ளி மாணவிகள் திறந்த வெளியில் அமர வைக்கப்பட்டுள்ளனர். அங்கே வகுப்பு நடக்கிறது. மழை பெய்தால், பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.திருப்பூர், 23வது வார்டு, புதுராமகிருஷ்ணாபுரத்தில் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி உள்ளது.
ஆறு முதல் பிளஸ் 2 வரை, 1,210 மாணவிகள் படிக்கின்றனர்.பள்ளியில் மொத்தம், ஒன்பது வகுப்பறைகள் மட்டுமே உள்ளது. ஒரு வகுப்பறையில், 70க்கும் அதிகமான மாணவிகளை அமர வைத்தும், 400க்கும் அதிகமான மாணவிகள் வெளியே அமர வேண்டியுள்ளது.ஆறு முதல் எட்டு வகுப்பு வரை படிக்கும், 450 பேர் வகுப்பறைக்கு வெளியே மரத்தடியில் அமர வைக்கப்பட்டுள்ளனர். ஆசிரியர் அங்கேயே அமர்ந்து பாடம் நடத்துகிறார்.தொடர்ந்து ஒரு வகுப்பு மாணவிகளை வெளியே அமர வைத்தால், அவர்களுக்குள் தாழ்வு மனப்பான்மை வளர்ந்து விடும் என்பதால், இரு நாட்களுக்கு ஒரு முறை சுழற்சிமுறையில் (6 ஏ, 6 பி, 6 சி) மாணவிகளை வெளியே அமர வைக்கின்றனர், ஆசிரியர்கள். ஒன்பது, பத்து, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவிகள் மட்டுமே வகுப்பறையில் அமர வைக்கப்பட்டுள்ளனர்.
மாநகராட்சியின் 'நபார்டு' மற்றும் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கி, ஆறு புதிய வகுப்பறை கட்ட இரண்டு ஆண்டுக்கு முன் கருத்துரு தயாரானது. இது ஏட்டளவில் மட்டுமே இன்றளவும் உள்ளது. மாணவிகள் மரத்தடி நிழலிலும், மழை பெய்தால் விடுமுறை என்ற அளவிலும் நாட்களை கழிக்கின்றனர். பள்ளி மாணவிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப கழிப்பிட வசதியும் குறைவாகவே உள்ளது.நடப்பு கல்வியாண்டு துவங்கி மூன்று மாதமாகியும், மாவட்ட கல்வி அலுவலர், முதன்மை கல்வி அலுவலர், மாநகராட்சி கமிஷனர் உள்ளிட்ட உயரதிகாரிகள் இப்பள்ளியை பார்வையிடவில்லை. குறைகளை யாரிடம் சொல்லி தீர்வு காண வேண்டும் என தெரியாமல் பள்ளி நிர்வாகத்தினர் விழிபிதுங்குகின்றனர்.
வேதனையை வென்றெடுத்து சாதனைகடந்த, 2015 ல் உயர்நிலைப்பள்ளியாக இருந்த இப்பள்ளி நான்கு ஆண்டுகளுக்கு முன் மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. பத்தாம் வகுப்பில், 200 மாணவர், பிளஸ் 1ல், 155 பேர், 12ல், 150 பேர் என மேல்நிலைக்கல்வியை, 502 மாணவர்கள் கற்கின்றனர்.வகுப்பறை வசதி இல்லா விட்டாலும் இப்பள்ளி ஆசிரியர்களின் கூட்டு முயற்சியால் தொடர்ந்து இரு ஆண்டுகளாக இப்பள்ளி நுாறு சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளது.இருப்பினும், இப்பள்ளிக்கான வசதியை செய்து தருவதில் மாநகராட்சி, கல்வித்துறை அக்கறை காட்டவில்லை. மாவட்ட நிர்வாகமும் திரும்பி பார்க்கவில்லை என்பதே கூடுதல் வேதனை.

மூலக்கதை