மீளுமா இங்கிலாந்து அணி: ஆஸி.,யுடன் 2வது மோதல் | ஆகஸ்ட் 13, 2019

தினமலர்  தினமலர்
மீளுமா இங்கிலாந்து அணி: ஆஸி.,யுடன் 2வது மோதல் | ஆகஸ்ட் 13, 2019

லண்டன்: இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இரண்டாவது ஆஷஸ் டெஸ்ட் இன்று துவங்குகிறது. தோல்வியிலிருந்து இங்கிலாந்து மீண்டு வருமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இங்கிலாந்து சென்றுள்ள ஆஸ்திரேலிய அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வென்றது. இரண்டாவது போட்டி இன்று லண்டனின் லார்ட்சில் துவங்குகிறது.

இங்கிலாந்து மண்ணில் ஆஸ்திரேலியா 18 ஆண்டுக்குப்பின் ஆஷஸ் தொடரில் வென்ற மகிழ்ச்சியில் உள்ளது. பான்கிராப்ட் இரு இன்னிங்சிலும் ஏமாற்றினார். இங்கிலாந்தில் நடந்த உலக கோப்பையில் (10 போட்டி, 647 ரன்) அதிக ரன் குவித்தவர்கள் பட்டியலில் வார்னர் (10 போட்டி, 647 ரன்) 2வது இடம் பிடித்தார். நடப்பு தொடரில் தடம் (2, 8 ரன்) புரண்டார்.

அசத்தும் ஸ்மித்

கவாஜாவின் பங்களிப்பு போதவில்லை. அணியின் நட்சத்திரமாக ஸ்டீவ் ஸ்மித் திகழ்கிறார். பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் 12 மாதம் தடைக்குப்பின் மீண்டு வந்துள்ள இவரது திறமை குறையவில்லை. இரு இன்னிங்சிலும் (144, 142) சதம் கடந்து அணியின் ஆதிக்கத்திற்கு உதவினார். ஜாம்பவான் பிராட்மேனுக்கு இணையாக கருதப்படும் ஸ்மித்தின் ரன் வேட்டையை தடுப்பது பவுலர்களுக்கு கடினம்தான். டிராவிஸ் ஹெட், 6 ஆண்டுக்குப்பின் டெஸ்ட் சதம் அடித்த வேட், கேப்டன் பெய்ன் என ரன் சேர்க்க பலர் உள்ளனர்.

2வது இன்னிங்சில் 6 விக்கெட் சாய்த்த, ‘சுழல்’ வீரர் லியான் ஜொலிக்கிறார். ‘வேகத்தில்’ ஸ்டார்க் இல்லாதபோதும், கம்மின்ஸ் (7 விக்.,) மிரட்டினார். சிடிலுக்குப்பதில் ஹேசல்வுட் இடம் பெறலாம்.

கைகொடுக்கும் ஸ்டோக்ஸ்

இங்கிலாந்து அணி உலக கோப்பை வென்றபின், வீழ்ந்துள்ளது. அறிமுக ஆஷஸ் தொடரில் சதம் அடித்தார் ரோரி பார்ன்ஸ். கேப்டன் ஜோ ரூட் கைகொடுத்தாலும், ஜேசன், பட்லர் உள்ளிட்டோர் தடுமாறுகின்றனர். அணியை கரை சேர்க்க ஸ்டோக்ஸ் இருக்கிறார். ஆஷஸ் வரலாற்றில், முதல் போட்டியில் வீழ்ந்தபின், இங்கிலாந்து இரண்டு முறை மட்டுமே கோப்பை வென்றிருப்பது சற்று ஏமாற்றம்தான்.

வருகிறார் ஆர்ச்சர்

வேகப்பந்துவீச்சாளர் ஆண்டர்சன் காயத்தால் விலகியதால், ஆர்ச்சருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. உலக கோப்பையில் பட்டையை கிளப்பிய (11 போட்டி, 20 விக்.,) இவர், அறிமுக டெஸ்டில் களமிறங்க தயார். பிராட் (6 விக்.,) ‘சீனியர்’ பொறுப்புடன் செயல்படுகிறார். ரன் வள்ளலாக (172 ரன்) மாறிய, மொயீன் அலிக்குப்பதில், ஜாக் லீச் பந்தை ‘சுழற்றலாம்’.

 

 

 

 

மூலக்கதை