சுப்ரமணியன் மீது நடவடிக்கை: பி.சி.சி.ஐ., முடிவு | ஆகஸ்ட் 13, 2019

தினமலர்  தினமலர்
சுப்ரமணியன் மீது நடவடிக்கை: பி.சி.சி.ஐ., முடிவு | ஆகஸ்ட் 13, 2019

புதுடில்லி: இந்திய கிரிக்கெட் அணி நிர்வாக மானேஜர் சுனில் சுப்ரமணியன் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி 3 ‘டுவென்டி–20’, 3 ஒரு நாள், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதற்கிடையே, மத்திய அரசு தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு விளம்பரத்தை வெளியிட திட்டமிட்டது. இதில் இந்திய கேப்டன் கோஹ்லி, ரோகித் பங்கேற்க வைக்க முடிவு செய்தது. இது குறித்து, இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) அணுகியது.

அதிகாரிகளுக்கு மறுப்பு

தற்போது, வீரர்கள் வெஸ்ட் இண்டீசில் இருப்பதால், நிர்வாக மானேஜர் சுப்ரமணியனை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டது. இந்திய துாதரகத்தை சேர்ந்த இரண்டு அதிகாரிகள், டிரினிடாட் அன்ட் டொபாகோவில் உள்ள சுப்ரமணியனை தொடர்பு கொண்டனர். இந்த விஷயத்தில் ஒத்துழைப்பு தர  மறுத்துவிட்டார். இந்த விவகாரம், பி.சி.சி.ஐ., தலைமை அதிகாரி ராகுல் ஜோரிக்கு தெரியவந்தது. இதன் அடிப்படையில், தமிழகத்தை சேர்ந்த சுப்ரமணியன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனத்தெரிகிறது. இவரது ஒப்பந்தகாலம் நடப்பு தொடருடன் முடிகிறது.

பி.சி.சி.ஐ., அதிகாரி ஒருவர் கூறுகையில்,‘‘ மத்திய அரசின் விளம்பரம் தொடர்பான விவகாரத்தில், சுப்ரமணியனுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் தொடர் துவங்கும் முன், இவரை இந்தியா திரும்ப உத்தரவிட வாய்ப்புள்ளது,’’ என்றார்.

 

மூலக்கதை