காஷ்மீர் விவகாரம்; மன்னிப்பு கேட்டார் நியூயார்க் எம்.பி.,

தினமலர்  தினமலர்
காஷ்மீர் விவகாரம்; மன்னிப்பு கேட்டார் நியூயார்க் எம்.பி.,

நியூயார்க்: 'காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் அமெரிக்கா தலையிட வேண்டும்; என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதை விளக்க வேண்டும்' என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் போம்பியோவுக்கு கடிதம் எழுதிய நியூயார்க் எம்.பி. டாம் சுயோஸ்சி 56 தன் செயலுக்கு மன்னிப்பு கேட்டுள்ளார்.


கடந்த 9ம் தேதி அவர் போம்பியோவுக்கு கடிதம் எழுதிய தகவல் மறுநாள் அமெரிக்காவில் வாழும் இந்தியர்களுக்கு தெரிய வந்தது. டாம் செயலை அவர்கள் கண்டித்தனர். 'இந்தியர்கள் ஆதரவில் வெற்றி பெற்று இந்தியர்களுக்கு எதிராக குரல் கொடுப்பதா' என கண்டித்தனர். அதையடுத்து இந்தியர்களின் கருத்தை அறிய சந்திக்க தயாராக இருக்கிறேன் என்றார் டாம். அதன்படி நேற்று முன்தினம் 100க்கும் மேற்பட்ட இந்தியர்கள் டாமை சந்தித்தனர். அவரிடம் காஷ்மீர் தொடர்பாக இந்தியாவின் நிலைப்பாட்டை தெரிவித்தனர்.


அதையடுத்து டாம் சுயோஸ்சி அமெரிக்க இந்தியர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். அவர் நேற்று விடுத்த அறிக்கையில் 'காஷ்மீர் விவகாரத்தை புரிந்து கொள்ளாமல் அவசரப்பட்டதற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க இந்தியர்களுடன் ஆலோசனை நடத்தியிருக்க வேண்டும். தவறு இழைத்து விட்டேன்' என தெரிவித்துள்ளார். இதை அமெரிக்க இந்தியர்கள் வரவேற்றுள்ளனர்.

மூலக்கதை