ராம பிரானின் வாரிசுகள் நாங்கள்: உதய்பூர் அரச குடும்பம் பெருமிதம்

தினமலர்  தினமலர்
ராம பிரானின் வாரிசுகள் நாங்கள்: உதய்பூர் அரச குடும்பம் பெருமிதம்

உதய்பூர்: ''ராம பிரானின் வம்சாவளியை சேர்ந்தவர்கள் நாங்கள்,'' என, ராஜஸ்தான் மாநிலம், உதய்பூர் அரச குடும்பத்தைச் சேர்ந்த மகேந்திர சிங் கூறினார்.


உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில், சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கு விசாரணை, உச்ச நீதிமன்றத்தில், ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன் நடந்து வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை, இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, 'ராமரின் வம்சாவளிகள் யாரேனும் இப்போது உள்ளனரா' என, நீதிபதிகள் கேட்டனர்.


இதையடுத்து, ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூர் அரச குடும்பத்தைச் சேர்ந்த, பா.ஜ., பெண் எம்.பி., தியாகுமாரி, 'நாங்கள், ராமரின் வம்சாவளியைச் சேர்ந்தவர்கள்; குறிப்பாக, ராமரின் மகன் குசாவின் வாரிசுகள். ராமரின் வம்சாவளி நாங்கள் என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. தேவைப்பட்டால், அவற்றை சமர்ப்பிக்கவும் தயார்' என, கூறினார். இது பெரும் பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது.


இந்நிலையில், இப்போது, ராஜஸ்தான் மாநிலம், மேவார் - உதய்பூர் அரச குடும்பத்தைச் சேர்ந்த மகேந்திர சிங்கும், 'நாங்கள் ராமரின் வம்சாவளியைச் சேர்ந்தவர்கள்' என, கூறியுள்ளார். மேலும், அவர் கூறுகையில், ''ராமரின் வாரிசுகள் பற்றி, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேட்டது, பத்திரிகைககள் வாயிலாக தெரிய வந்தது. நீதிமன்றம், எங்களை நாடலாம். ஏனெனில், நாங்கள் தான், ராமரின் உண்மையான வம்சாவளியைச் சேர்ந்தவர்கள்; அதற்கான எல்லா ஆவணங்களும், எங்களிடம் உள்ளன,'' என்றார்.

மூலக்கதை