அமெரிக்க மத்தியஸ்தத்திற்கு தேவையே இருக்காது; இந்திய தூதர் திட்டவட்டம்

தினமலர்  தினமலர்
அமெரிக்க மத்தியஸ்தத்திற்கு தேவையே இருக்காது; இந்திய தூதர் திட்டவட்டம்

வாஷிங்டன்: ''காஷ்மீர் பிரச்னையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எவ்வித மத்தியஸ்தத்திலும் ஈடுபட மாட்டார்; அதற்கான வாய்ப்பு ஒரு போதும் இருக்காது'' என அமெரிக்காவுக்கான இந்திய துாதர் ஹர்ஷ் வர்தன் ஸ்ரீங்லா கூறினார்.


அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் ஜூலை ௨௨ல் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் முன்னிலையில் பத்திரிகையாளர்களை சந்தித்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் 'பிரதமர் மோடி ஜப்பானில் என்னை சந்தித்த போது காஷ்மீர் பிரச்னையில் மத்தியஸ்தம் செய்யுமாறு கேட்டுக் கொண்டார்' என தெரிவித்தார். இதற்கு இந்தியா உடனடியாக மறுப்பு தெரிவித்தது. வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பார்லிமென்டிலேயே அதை மறுத்து அறிக்கை வெளியிட்டார். அதில் 'இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான விவகாரம்; அதில் மூன்றாம் நாடுகளுக்கு எந்த வேலையும் இல்லை. அதிபர் டொனால்டு டிரம்பிடம் மத்தியஸ்தம் செய்ய பிரதமர் மோடி கேட்கவில்லை' என்றார்.


அதையடுத்து அதிபர் டிரம்ப் கூறும் போது 'காஷ்மீர் பிரச்னையை தீர்க்க வேண்டியது இந்தியா பாகிஸ்தான் நாடுகளின் பொறுப்பு. அவர்கள் விரும்பினால் அந்த விவகாரத்தில் தலையிட தயார்' என்றார். இந்நிலையில் அதிபர் டிரம்புக்கு மிகவும் பிடித்தமான அமெரிக்காவின் 'பாக்ஸ் நியூஸ்' செய்தி நிறுவனத்திற்கு அமெரிக்காவுக்கான இந்திய துாதர் ஹர்ஷ்வர்தன் ஸ்ரீங்லா பேட்டியளித்துள்ளார்.

அதில் அவர் கூறியுள்ளதாவது: காஷ்மீர் பிரச்னை தொடர்பாக அதிபர் டிரம்ப் எவ்வித மத்தியஸ்த முயற்சியிலும் ஈடுபட மாட்டார். அதற்கான தேவையும் இருக்காது. அதே நேரத்தில் காஷ்மீர் பிரச்னையை தீர்க்க இரு நாடுகளும் முயற்சிக்க வேண்டும் என அமெரிக்கா விரும்புகிறது. அதற்கான இருதரப்பு பேச்சை இரு நாடுகளின் தலைவர்கள் மேற்கொள்ள வேண்டும் என்பது அமெரிக்காவின் நிலைப்பாடு. அதுபோலத் தான் ஐக்கிய நாடுகள் சபையின் கொள்கையும். இந்தியா - பாகிஸ்தான் விவகாரத்தில் அந்த அமைப்பு தலையிடாது. இரு நாடுகளுக்கும் இடையே ஏற்படுத்தப்பட்டுள்ள ஒப்பந்தங்களின்படி பிரச்னைகளை பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டியது இரு நாடுகளின் கடமை என்பது தான் ஐ.நா.வின் வாதம்.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை அடுத்து அங்கு சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பதற்றம் தணிந்ததும் அந்த கெடுபிடிகள் விலக்கிக் கொள்ளப்படும். எல்லை தாண்டிய பயங்கரவாதம் ஊடுருவல் போன்றவற்றை தடுப்பதற்காகவே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும் காஷ்மீரில் பக்ரீத் பண்டிகையை ஏராளமானோர் உற்சாகமாக கொண்டாடினர். மசூதிகளில் வழக்கம் போலவே மக்கள் கூட்டம் காணப்பட்டது; சில சாலைகளில் மக்கள் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் கூட ஏற்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை