சிலை கடத்தலே எனக்கு பிரதான தொழில் போலீசாரிடம் பெண் தொழிலதிபர் வாக்குமூலம்

தினமலர்  தினமலர்
சிலை கடத்தலே எனக்கு பிரதான தொழில் போலீசாரிடம் பெண் தொழிலதிபர் வாக்குமூலம்

சென்னை : 'சிலை கடத்தல் தான், எனக்கு பிரதான தொழில்; என் தாத்தா காலத்தில் இருந்து, சிலைகளை கடத்தி வந்தோம்' என, கைதான பெண் தொழில் அதிபர், வாக்குமூலம் அளித்து உள்ளார்.

ஐரோப்பிய நாடான, பிரான்ஸ் குடியுரிமை பெற்றவர், மரிய தெரசா வனினா ஆனந்தி, 34; தொழில் அதிபர். இவரது கணவர், பிரான்சிஸ் பிரபாகர். பஞ்சலோக சிலைஇருவரும் சிலை கடத்தலில் ஈடுபட்டு வந்தனர். புதுச்சேரி, உப்பளம், இந்திரா காந்தி விளையாட்டு மைதானம் அருகே உள்ள பங்களாவில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள, 11 பஞ்சலோக சிலைகளை பதுக்கி வைத்திருந்தனர்.இந்த வழக்கில், மரிய தெரசா வனினா ஆனந்தி, நேற்று முன்தினம், கைது செய்யப்பட்டார்.

கைதான மரிய தெரசா வனினா ஆனந்தி, போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலம்: புதுச்சேரியில், 'ஆர்ட் கேலரி' நடத்தி வந்தோம். கைவினை பொருட்களுடன், தொன்மையான பஞ்சலோக சிலைகளை, போலி சான்றிதழ்கள் பெற்று, இலங்கை தலைநகர் கொழும்பு வழியாக, பிரான்சுக்கு கடத்தி, கோடிக்கணக்கான ரூபாய்க்கு விற்று வந்தோம்.என் தாத்தா, ஜெரால்டு கொண்டப்பா, சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இவரும், சிலை கடத்தல் தொழிலில் தான் ஈடுபட்டு வந்தார். எங்கள் பிரதான தொழிலே, சிலைகளை கடத்துவது தான்.

இதுவரை, 30 பஞ்சலோக சிலைகளை வெளிநாடுகளுக்கு கடத்தி உள்ளோம். போலீசாரின் நெருக்கடி காரணமாக, எங்களால், 2012க்கு பின், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு, சிலைகளை கடத்த முடியவில்லை. இதனால், பல கோடி ரூபாய் மதிப்புள்ள, நடராஜர், திருமண கோலத்தில், சிவன் - பார்வதி என, 11 பஞ்சலோக சிலைகளை, புதுச்சேரியில் உள்ள, எங்கள் பங்களாவில், கட்டிலுக்கு அடியிலும், ரகசிய அறையிலும் பதுக்கி வைத்திருந்தோம். பங்களாவின் சாவி, எங்கள் மேலாளர், புஷ்பராஜ் வசம் இருந்தது. இவரை, 2016ல், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.,யாக இருந்த, பொன் மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் பிடித்து விட்டனர். 'வீடியோ' அவர் தான், சிலைகள் பதுக்கி வைத்திருந்த இடத்தை, போலீசாரிடம் போட்டுக் கொடுத்து விட்டார்.

'போலீசாரிடம் சிக்க வாய்ப்பில்லை' என்ற நம்பிக்கையில், கணவர், என்னை சென்னைக்கு அனுப்பினார். ஆனால், மத்திய உள்துறை அமைச்சக உதவியுடன், போலீசார் என்னை பிடித்து விட்டனர். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.மரிய தெரசா ஆனந்தி வனினாவை, கும்பகோணத்தில், நீதிபதி மாதவ ராமானுஜத்தின் வீட்டிற்கு அழைத்து சென்று நேற்று, ஆஜர்படுத்தினர். அவரை விசாரித்த நீதிபதி, 27ம் தேதி வரை, நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

மூலக்கதை