தமிழக பாஜ தலைவர் தேர்தல் தேதி அறிவிப்பு: பதவியை பிடிக்க கடும் போட்டி

தினகரன்  தினகரன்
தமிழக பாஜ தலைவர் தேர்தல் தேதி அறிவிப்பு: பதவியை பிடிக்க கடும் போட்டி

புதுடெல்லி: பாஜ உட்கட்சி தேர்தல் வரும் செப்டம்பர் 11ம் தேதி முதல் தொடங்குகிறது. கட்சியின் மாநிலத் தலைவர்கள் டிசம்பர் 1 முதல் 15ம் தேதிக்குள் தேர்வு செய்யப்பட உள்ளனர் என்று அக்கட்சி அறிவித்துள்ளது.இதுகுறித்து பாஜ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:பாஜ.வின் தேசிய தேர்தல் குழு, அதன் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ராதாமோகன் சிங் தலைமையில் நேற்று டெல்லியில் கூடி உட்கட்சி தேர்தல் குறித்து ஆலோசித்தது. இதில் கட்சி தேர்தல் தேதிகள் முடிவு  செய்யப்பட்டுள்ளது. இதன்படி, வரும் செப்டம்பர் 11ம் தேதி உட்கட்சி தேர்தல் தொடங்குகிறது. இதில் கட்சியின் பூத் கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் அதன் தலைவர்கள் செப்டம்பர் 30ம் தேதி தேர்வு செய்யப்படுவார்கள்.இதைத்தொடர்ந்து மண்டல  அளவிலான மற்றும் மாவட்ட அளவிலான தேர்தல் முறையே, அக்டோபர் 11 முதல் 31ம் தேதிக்குள்ளும், நவம்பர் 11 முதல் 30ம் தேதிக்குள்ளும் நாடு முழுவதும் நடக்கும். அதன்பின்னர் மாநிலத் தலைவர்கள் தேர்தல் டிசம்பர் 1 முதல் 15ம்  தேதிக்குள் நடக்கும். இதைத்தொடர்ந்து, தேசியக் கவுன்சில் அமைக்கப்படும். தேசியக் கவுன்சில் கூடி கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்யும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.கட்சியின் தலைவரான அமித்ஷா, மத்திய அமைச்சராகி உள்ளதால், இந்த தேர்தலில் புதிய தலைவருக்கு வழிவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் கட்சியின் செயல்தலைவராக ஜே.பி.நட்டா நியமிக்கப்பட்டார். அவரே இந்த  தேர்தலில் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளதாக பாஜ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தின் புதிய தலைவராக யார் தேர்ந்தெடுக்கப்படுவார் என பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தற்போது தமிழக பாஜ தலைவர் பதவிக்கு  கடும் போட்டி நிலவுகிறது. இப்பதவிக்கு, சி.பி.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், சந்திரசேகர் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதில் யார் தலைவர் பதவியை பிடிக்கப் போகிறார்கள் என்ற பரபரப்பு  தொண்டர்களிடம் எழுந்துள்ளது.

மூலக்கதை