மனித உரிமை நீதிமன்ற விவகாரம் 7 மாநிலங்களுக்கு அபராதம்

தினகரன்  தினகரன்
மனித உரிமை நீதிமன்ற விவகாரம் 7 மாநிலங்களுக்கு அபராதம்

புதுடெல்லி: மனித உரிமைகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ், நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் மனித உரிமை நீதிமன்றம் அமைப்பது, இதற்காக சிறப்பு அரசு வழக்கறிஞர்களை நியமிப்பது தொடர்பாக பதிலளிக்க உச்ச நீதிமன்றம்  கடந்த 2018ம் ஆண்டு உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் குப்தா, பி.ஆர். கவாய் அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இது தொடர்பாக சில மாநிலங்கள் பதிலளிக்காமல் இருப்பதும், அம்மாநில வழக்கறிஞர்கள்  நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்ததும் நீதிபதிகளுக்கு தெரியவந்தது.இதையடுத்து நீதிபதிகள், ``இந்த வழக்கில் பதிலும் அளிக்காமல், மாநில தரப்பு வழக்கறிஞர்கள் ஆஜராகாமலும் உள்ள ராஜஸ்தான், உத்தரகாண்ட் மாநிலங்களுக்கு தலா ₹ 1 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. அதேபோல், பதில் அளிக்க தவறிய  தெலங்கானா, உபி., ஒடிசா, மேகாலயா, மிசோரம் ஆகிய மாநிலங்களுக்கு தலா ₹50 ஆயிரமும் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த 7 மாநிலங்களும் அபராதம் செலுத்திய பின், 4 வாரங்களுக்குள் தங்கள் பதில் மனுவை தாக்கல் செய்ய  வேண்டும்,’’ என்று உத்தரவிட்டனர்.

மூலக்கதை