மகாராஷ்டிரா, கர்நாடகா, கோவாவில் மழை வெள்ளத்தில் சிக்கிய 14,000 பேரை மீட்ட கடற்படை

தினகரன்  தினகரன்
மகாராஷ்டிரா, கர்நாடகா, கோவாவில் மழை வெள்ளத்தில் சிக்கிய 14,000 பேரை மீட்ட கடற்படை

பனாஜி: மகாராஷ்டிரா, கர்நாடகா, கோவாவில் கடந்த ஒரு வாரத்தில் மழை வெள்ளத்தில் சிக்கிய 14,000 பேரை கடற்படை மீட்டுள்ளதாக மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.கோவாவின் வாஸ்கோ நகரில் கடற்படையின் ரியர் அட்மிரல் பிலிப்போஸ் பைனுமோதில் அளித்த பேட்டியில் கூறியதாவது: மகாராஷ்டிரா, கர்நாடகா, கோவாவில் கடந்த ஒரு வாரமாக பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி  தவித்தவர்களை மீட்கும் பணியில் கடற்படை ஈடுபட்டது. ‘வர்ஷா ராத்’ என்ற பெயரில் நடந்த மீட்பு பணியில் 41 கடற்படை குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டன. மீட்பு பணியில் அதிநவீன இலகு ரக ஹெலிகாப்டர், படகுகள் பயன்படுத்தப்பட்டன.எங்கள் வீரர்கள் மகாராஷ்டிரா, கோவாவில் வெள்ளத்தில் தத்தளித்த 11,124 பேரையும்,  கர்நாடகாவில் 3,115 பேரையும் பத்திரமாக மீட்டுள்ளனர். கடந்த 30 ஆண்டில் நிகழ்த்தப்பட்ட பெரிய சாதனை இது. கர்நாடகாவில் வெள்ளம் சூழ்ந்த பகுதியில்  சிக்கிய மக்களுக்கு உதவும் வகையில் 1,305 கிலோ உணவுப் பொருளும், மகாராஷ்டிராவில் 1,890 கிலோ உணவுப் பொருளும் ஹெலிகாப்டர் மூலமாக விநியோகிக்கப்பட்டு உள்ளது.கர்நாடகாவின் பெல்காமில் கடந்த 7ம் தேதி முதல் நடந்த மீட்பு பணியில் 17 ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டது. 34 மணி நேர மீட்புப் பணியில் 2,517 பேரும், அவர்களில் 138 பேர் முழுமையாக வெள்ளத்தில் மூழ்கிய பகுதியில் இருந்து அதிநவீன  ஹெலிகாப்டர் மூலமாகவும் மீட்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மூலக்கதை