சிபிஎஸ்இ தேர்வு கட்டண உயர்வுக்கு 200 கோடி பற்றாக்குறையே காரணம்: அதிகாரிகள் தகவல்

தினகரன்  தினகரன்
சிபிஎஸ்இ தேர்வு கட்டண உயர்வுக்கு 200 கோடி பற்றாக்குறையே காரணம்: அதிகாரிகள் தகவல்

புதுடெல்லி:  சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு கட்டணத்தை உயர்த்துவதற்கு ₹200 கோடி பற்றாக்குறையே காரணம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிபிஎஸ்இ 10ம் வகுப்பு ேதர்வு எழுதும் மாணவர்கள் 9ம் வகுப்பு படிக்கும்போதே பதிவு செய்ய வேண்டும். பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் பிளஸ் 1ம் வகுப்பிலேயே தேர்வுக்கு பதிவு செய்ய வேண்டும். இந்நிலையில், கடந்த வாரம்  சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான தேர்வு கட்டணத்தை மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) உயர்த்தி அறிவித்தது. இதற்கு பல்வேறு தரப்பினரும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இந்நிலையில், கட்டண  உயர்வு குறித்து. சிபிஎஸ்இ செயலாளர் அனுராக் திரிபாதி  கூறியதாவது:முன்கூட்டியே தேர்வு முடிவு, வினாத்தாள் கசிவு மற்றும் பிழையில்லா தேர்வுத்தாள் திருத்தம் போன்றவற்றுக்கான நடவடிக்கைகள், மத்திய கல்வி வாரியத்துக்கு நிதிச்சுமையை ஏற்படுத்துகின்றன.  ஜேஇஇ, நீட் உள்ளிட்ட போட்டி தேர்வுகள்  நடத்துவது என்டிஏ எனப்படும் தேசிய தேர்வு முகமைக்கு மாற்றப்பட்டு இருப்பது, தற்போது நிதி நெருக்கடியை உருவாக்கியுள்ளது. சுய ஆதாரம், தரமான தேர்வு மற்றும் மதிப்பீடு, ₹200 கோடி பற்றாக்குறையில் இருந்து மீண்டு வருவது உள்ளிட்ட காரணங்களுக்காக கட்டண உயர்வு தேவைப்படுகிறது. ஆண்டுதோறும் 10, 12ம் வகுப்பு தேர்வுகளை நடத்துவதற்கு சிபிஎஸ்இ ₹500  கோடி செலவிடுகிறது. இதனால் ₹200 கோடி பற்றாக்குறை நிலவி வந்தது. எனினும், ஜேஇஇ, நீட் போன்ற போட்டி தேர்வுகள் நடத்துவதன் மூலமாக இந்த நிதி பற்றாக்குறையை சரிசெய்து வந்தோம். ஆனால், தற்போது போட்டி தேர்வுகள் தேசிய  தேர்வு முகமைக்கு வழங்கப்பட்டுள்ளது. எனவே, கட்டணத்தை உயர்த்துவதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை