கேரளாவில் இன்றும்,நாளையும் அதி தீவிர மழை;

தினமலர்  தினமலர்
கேரளாவில் இன்றும்,நாளையும் அதி தீவிர மழை;

திருவனந்தபுரம்: கடந்த, ஒரு வாரத்திற்கும் மேலாக, மழையின் கோரப் பிடியில் சிக்கி, சீரழிந்து வரும் கேரளாவில், ஐந்து மாவட்டங்களில், 'ரெட் அலெர்ட்' எனப்படும், அதிதீவிர மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இன்றும், நாளையும் பலத்த மழை பெய்யும் என்பதால், மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.


475 பேர் பலி:


கேரளாவில், கடந்த ஆண்டு, ஆகஸ்ட், 15க்குப் பின், தென் மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்து, மலப்புரம், வயநாடு, இடுக்கி, எர்ணாகுளம், ஆலப்புழா மாவட்டங்களை சின்னாபின்னமாக்கியது. மழை மற்றும் வெள்ளத்தால், 475 பேர் பலியாகினர்; ஏராளமான வீடுகள், தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன; சாலைகள் துண்டிக்கப்பட்டன. அதுபோலவே, இந்த ஆண்டும், சில நாட்களுக்கு முன்னதாக, ஒரு வாரத்திற்கும் மேலாக, பலத்த மழை, இந்த மாவட்டங்களில் வெளுத்து வாங்குகிறது. இந்த முறை, மழை, வெள்ளத்துடன், நிலச்சரிவும் சேர்ந்ததால், ௯௦க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

மலப்புரம் மாவட்டத்தில் உள்ள கவலபாரா என்ற மலை கிராமத்தில், நிலச்சரிவு ஏற்பட்டு, அந்த கிராமத்தின், 50 வீடுகள் மண்ணில் புதைந்தன. இதில், 40க்கும் மேற்பட்டோர், உயிருடன் மண்ணில் புதைந்து இறந்துள்ளனர். மாநிலத்தின் பல பகுதிகளில், 2.52 லட்சம் பேர், நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். இதற்காக, 1,332 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன; 8,500 வீடுகள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், 'இன்றும், நாளையும், கேரளாவின், ஐந்து மாவட்டங்களிலும், இந்தியாவின் மத்திய பகுதியில் உள்ள மாநிலங்களிலும், அதிதீவிர மழை பெய்யும்' என, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு நிலையால், மழை அதிகம் பெய்யக் கூடும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், கேரளாவின் இந்த மாவட்ட மக்கள், கவலை அடைந்துள்ளனர்.


சரி செய்தனர்:


இதற்கிடையே, கேரளாவின் மற்ற பகுதிகளில், நேற்று மழை நின்றதால், நிவாரண முகாம்களில் இருந்தவர்கள், வீடுகளுக்கு திரும்பி, அலங்கோலமாக கிடந்த பொருட்களை சரி செய்தனர். இந்நிலையில், மாநில முதல்வர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த, பினராயி விஜயன், மழை பாதித்த, வயநாடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, நிவாரண பணிகளை முடுக்கி விட்டார்.

வெளிநாட்டு மலையாளிகள் கேரளாவுக்கு உதவிக்கரம்:


ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில், ஏராள மாக வசிக்கும் கேரள மாநிலத்தவர், தங்கள் சொந்த மாநிலத்தில், மழை, வெள்ளம், நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உதவ முன்வந்துள்ளனர். வளைகுடா நாடுகளில் பல்வேறு வேலைகளில் இருக்கும் அவர்கள், அங்கிருக்கும் மலையாளிகளிடம், தாராளமாக உதவுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். புதிய ஆடைகள், பெண்களுக்கான சானிட்டரி நாப்கின்கள், சோப்பு, செருப்பு, ஆடைகள், பிஸ்கட், ஓட்ஸ் உணவுப்பொருட்கள் போன்ற வற்றை சேகரிக்க, ஆங்காங்கே, பொருள் சேகரிப்பு மையங்களை ஏற்படுத்தியுள்ளனர். இதற்காக, சமூக வலைதளங்களை பயன்படுத்தி, வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும், முதல்வரின் நிவாரண நிதிக்கு பணம் வழங்குமாறும், பலர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

மூலக்கதை