சீனாவை தாக்கிய லெகிமா புயல்: இதுவரை 49 பேர் உயிரிழப்பு

தினகரன்  தினகரன்
சீனாவை தாக்கிய லெகிமா புயல்: இதுவரை 49 பேர் உயிரிழப்பு

பீஜிங்: சீனாவின் செஜியாங் மாகாணத்தை கடந்த சனிக்கிழமை லெகிமா புயல் தாக்கியது. அப்போது மணிக்கு 190 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீசியதுடன், பலத்த மழையும் பெய்தது. கனமழையால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கடல் கடும் கொந்தளிப்புடன் காணப்பட்டது. இந்த சூறாவளியால் ஏராளமான மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் சாய்ந்தன. அதன்பின்னர் ஷாங்டாங், அன்ஹூய் ஆகிய மாகாணங்களையும் லெகிமா புயல் தாக்கியது. யாங்ஜியா மாகாணத்தில் வென்ஜோ நகரில் நிலச்சரிவால் அணை உடைந்து ஊருக்குள் நீர் புகுந்தது. இதில் அணையைச் சுற்றியுள்ள கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. இதில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 32 பேர் பலியாயினர். 16 பேர் மாயமாகினர். 10.8 லட்சம் பேர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டனர். செஜியாங் மாகாணத்தில் மட்டும் 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 34 ஆயிரம் வீடுகள், 1 லட்சத்து 73 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பு பயிர்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. 3,200 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. புயல் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சனிக்கிழமையன்று புயல் மழை தொடர்பான விபத்துக்களில் சிக்கி உயிரிழந்த 13 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. மேலும் சிலரைத் தேடி வந்தனர். அதன்பின்னர் இரண்டு நாட்களாக நடந்த மீட்பு பணியின்போது மேலும் பலரது உடல்கள் மீட்கப்பட்டன. இன்று காலை நிலவரப்படி பலி எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 21 பேரைக் காணவில்லை. அவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. இந்த இயற்கை பேரிடரால் சுமார் 26 பில்லியன் யுவான் (3.7 பில்லியன் டாலர்) அளவுக்கு பொருளாதார இழப்பு ஏற்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை