நாடுகள் பாராமுகம்: பாக்., புலம்பல்

தினமலர்  தினமலர்
நாடுகள் பாராமுகம்: பாக்., புலம்பல்

இஸ்லாமாபாத்: காஷ்மீர் விவகாரத்தில், பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்து, ஐ.நா., பாதுகாப்பு சபையில் உள்ளவர்கள், பூங்கொத்து கொடுத்து வரவேற்பார்கள் என நினைத்து முட்டாள்களின் சொர்க்கத்தில் பாகிஸ்தானியர்கள் வாழக்கூடாது என அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி கூறியுள்ளார்.

மேலும் அவர், உணர்வுகளை வெளிப்படுத்துவது எளிது. எதிர்ப்புகளை வெளிப்படுத்துவது அதை விட எளிது. அந்த விவகாரத்தை புரிந்து கொண்டு முன்னேறி செல்வது கடினம். ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள நாடுகள் கையில் பூங்கொத்துடன் நிற்கவில்லை. அந்த சபையில் நிரந்தர உறுப்பு நாடுகளில் ஏதாவது ஒன்று தடையை ஏற்படுத்தலாம். இவ்வாறு டிவி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ஷா மஹ்மூத் குரேஷி கூறியுள்ளார்.காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான், இந்த விவகாரத்தை சர்வதேச அரங்கில் எழுப்ப போவதாக கூறியது. ஆனால், பாகிஸ்தானை எந்த நாடும் கண்டுகொள்ளவில்லை. காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது, இந்தியாவின் அரசியல் சாசனத்திற்கு உட்பட்டது என கருத்து தெரிவித்தது.
அமெரிக்கா இரு தரப்புக்கும் பொதுவாக கருத்து கூறியது. காஷ்மீர் பிரச்னை, கவலை அளிப்பதாக சீனா கூறியது. பெரும்பாலான நாடுகள், இந்தியாவிற்கு ஆதரவாகவே கருத்து தெரிவித்திருந்தன. ஏமாற்றம் அடைந்த பாகிஸ்தான், இந்தியாவுடன் தூதரக மற்றும் வர்த்தக உறவை முறித்து கொண்டது. சம்ஜவுதா, தார் எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகளையும், பஸ் சேவையையும் நிறுத்தியது. இந்திய சினிமாக்களையும் வெளியிட தடை விதித்துள்ளது.

மூலக்கதை