காஷ்மீர் விவகாரத்தில் டிரம்ப் தலையீடு இல்லை

தினமலர்  தினமலர்
காஷ்மீர் விவகாரத்தில் டிரம்ப் தலையீடு இல்லை

வாஷிங்டன்: காஷ்மீர் விவகாரத்தில் தலையிடும் திட்டம் தொடர்ந்து தனது பரிசீலனையில் இல்லை என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெளிவுபடுத்தி விட்டதாக, இந்திய தூதர் கூறியுள்ளார்.

அமெரிக்க கொள்கை


இது குறித்து அமெரிக்காவிற்கான இந்திய தூதர் ஹர்ஷ் வர்தன் சிரிங்கலா, டிவி ஒன்றுக்கு அளித்த பேட்டி:
காஷ்மீர் விவகாரத்தில் தலையிடுவது கிடையாது என்பது அமெரிக்காவின் நீண்ட கால கொள்கை. ஆனால், பிரச்னைகளை தீர்க்க இந்தியா பாகிஸ்தான் நாடுகள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பதை அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. இந்தியா , பாகிஸ்தான் நாடுகள் ஏற்று கொண்டால் மட்டுமே, காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்வேன் என டிரம்ப் தெளிவாக கூறினார். தற்போது, அமெரிக்காவின் மத்தியஸ்தத்தை இந்தியா நிராகரித்து விட்டதால், அந்த திட்டம் தொடர்ந்து பரிசீலனையில் இல்லை என்பதை டிரம்ப் தெளிவுபடுத்திவிட்டார். இவ்வாறு அவர் கூறினார்.இந்தியா நிராகரிப்பு

கடந்த ஜூலை 22 ம் தேதி, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், வாஷிங்டன்னில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பை சந்தித்து பேசினார்.
இதன் பின்னர் டிரம்ப் நிருபர்களிடம் கூறுகையில், காஷ்மீர் விவகாரத்தில், தான் மத்தியஸ்தம் செய்ய வேண்டும் என மோடி கூறியதாக தெரிவித்தார்.ஆனால், இதனை மறுத்த இந்தியா, மோடி, அவ்வாறு எந்த கோரிக்கையும் விடவில்லை. இந்தியா பாகிஸ்தான் இடையிலான பிரச்னை, இரு நாடுகளும் பேசி தீர்த்து கொள்ளப்படும் எனக்கூறியது.இதன் பின்னர், டிரம்ப், இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் விரும்பினால், மட்டுமே காஷ்மீர் விவகாரத்தில் தலையிடுவேன் என கூறியிருந்தார்.

மூலக்கதை