2வது ஒருநாள் போட்டி வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி முன்னிலை பெற்றது இந்தியா: கோஹ்லி ஆட்ட நாயகன்

தினகரன்  தினகரன்
2வது ஒருநாள் போட்டி வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி முன்னிலை பெற்றது இந்தியா: கோஹ்லி ஆட்ட நாயகன்

போர்ட் ஆப் ஸ்பெயின்: வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் நடந்த 2வது ஒருநாள் போட்டியில், டி/எல் விதிப்படி 59 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றது. இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள்  மோதிய 2வது ஒருநாள் போட்டி டிரினிடாட், குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. டாசில் வென்று பேட் செய்த இந்திய அணி 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 279 ரன் குவித்தது. அபாரமாக விளையாடிய  கேப்டன் கோஹ்லி 120 ரன் (125 பந்து, 14 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி அசத்தியதுடன், ஒருநாள் போட்டிகளில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக அதிக ரன் குவித்த வீரர்கள் பட்டியலிலும் முதலிடத்துக்கு முன்னேறி சாதனை படைத்தார். கோஹ்லி -  ஷ்ரேயாஸ் ஜோடி 4வது விக்கெட்டுக்கு 125 ரன் சேர்த்தது குறிப்பிடத்தக்கது. ஷ்ரேயாஸ் 71 ரன் (68 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தார். ஜடேஜா 16, ஷமி 3 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சில் பிராத்வெய்ட் 3, காட்ரெல், ஹோல்டர், சேஸ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் 12.5 ஓவரில் 2 விக்கெட்  இழப்புக்கு 55 ரன் எடுத்திருந்தபோது, மழை காரணமாக ஆட்டம் தடைபட்டது. தனது 300வது ஒருநாள் போட்டியில் களமிறங்கிய கிறிஸ் கேல் 11 ரன், ஹோப் 5 ரன்னில் ஆட்டமிழந்தனர். பின்னர் தொடர்ந்த ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் 46  ஓவரில் 270 ரன் எடுத்தால் வெற்றி என இலக்கு மாற்றியமைக்கப்பட்டது. அந்த அணி 42 ஓவரில் 210 ரன் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டையும் பறிகொடுத்தது. லூயிஸ் அதிகபட்சமாக 65 ரன் (80 பந்து, 8 பவுண்டரி, 1 சிக்சர்), பூரன் 42  ரன் (69 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்), ஹெட்மயர், சேஸ் தலா 18, காட்ரெல் 17 ரன்னில் வெளியேற... பிராத்வெய்ட், ரோச், தாமஸ் டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தனர். 34.1 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 179 ரன் எடுத்திருந்த வெஸ்ட் இண்டீஸ் அணி, மேற்கொண்டு 31 ரன் மட்டுமே சேர்த்து 6 விக்கெட்டை இழந்து தோல்வியைத் தழுவியது. கேப்டன் ஹோல்டர் 13 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.இந்திய பந்துவீச்சில் புவனேஷ்வர் 4, ஷமி, குல்தீப் தலா 2, கலீல், ஜடேஜா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். கோஹ்லி ஆட்ட நாயகன் விருது பெற்றார். இந்தியா 1-0 என முன்னிலை வகிக்க, 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி போர்ட் ஆப்  ஸ்பெயினில் நாளை இரவு 7.00 மணிக்கு தொடங்குகிறது.லாராவை முந்தினார் கிறிஸ் கேல்ஒருநாள் போட்டிகளில் அதிக ரன் குவித்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் பட்டியலில், பிரையன் லாராவை (10,405 ரன்) பின்னுக்குத் தள்ளி கிறிஸ் கேல் முதலிடம் பிடித்தார். இதுவரை 300 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ள அவர் 10,408  ரன் (அதிகம் 215, சராசரி 37.71, சதம் 25, அரை சதம் 53) விளாசி உள்ளார்.

மூலக்கதை