இறுதி போட்டிக்கு முன்னேற டிராகன்ஸ் - பேந்தர்ஸ் பலப்பரீட்சை

தினகரன்  தினகரன்
இறுதி போட்டிக்கு முன்னேற டிராகன்ஸ்  பேந்தர்ஸ் பலப்பரீட்சை

நத்தம்: டிஎன்பிஎல் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் முனைப்பில் இன்று திண்டுக்கல் டிராகன்ஸ் - மதுரை பேந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன. டிஎன்பிஎல் தொடரின் 4வது சீசன் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. திருநெல்வேலியில்  நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் தகுதிச்சுற்று போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி  திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறியது. அடுத்து நடந்த வெளியேற்றும் சுற்றில்  மதுரை பேந்தர்ஸ் - காஞ்சி  வீரன்ஸ் மோதின. அதில் காஞ்சியை வெளியேற்றி 2வது தகுதிச்சுற்றில் விளையாட மதுரை தகுதி பெற்றுள்ளது.இன்று நடைபெறும் 2வது தகுதிச்சுற்றுப் போட்டியில்  திண்டுக்கல் - மதுரை அணிகள் களம் காண்கின்றன. இதில் வெற்றி பெறும்  அணி நாளை மறுதினம் சென்னையில் நடைபெறும் இறுதிப் போட்டியில் சேப்பாக்கம் அணியை எதிர்த்து விளையாடும்.நடப்பு சாம்பியனான மதுரை தட்டுதடுமாறிதான் பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்தது. காஞ்சியுடனான போட்டியில்  போராடி வென்றதால் அந்த அணியின் தன்னம்பிக்கை அதிகரித்துள்ளது. அருண் கார்த்திக், கவுசிக், செல்வகுமரன், மிதுன்,  சரத்ராஜ், அபிஷேக் தன்வர் தங்கள் முழுத்திறமையையும்  வெளிப்படுத்தினால் மதுரை மீண்டும் இறுதிப் போட்டிக்குள் நுழையலாம். லீக் சுற்றில் அசத்தலாக விளையாடிய திண்டுக்கல் அதற்கு தடை போடும் வாய்ப்பும் அதிகம்.  திண்டுக்கல்  லீக் சுற்றில்  7 போட்டிகளில் விளையாடி கோவையிடம் மட்டுமே தோற்றது. முதல் தகுதிச் சுற்றிலும் சேப்பாக்கத்திடம் நூலிழையில் தான் தோற்றது. கடந்த சீசன் இறுதிப் போட்டியில் மதுரையிடம் தோற்றதற்கு கட்டாயம் பழி வாங்கவும் அந்த  அணி முயற்சிக்கும். கேப்டன் ஆர்.அஷ்வின், சிலம்பரசன், ஜெகதீசன், ஹரி நிஷாந்த் ஆகியோர் நல்ல பார்மில் உள்ளனர். இரு அணிகளும் பைனலுக்கு முன்னேற முனைப்பு காட்டுவதால், போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

மூலக்கதை