இந்திய கபடி அணியில் இடம்பிடிப்பதே இலக்கு...சந்திரன் ரஞ்சித் உற்சாகம்

தினகரன்  தினகரன்
இந்திய கபடி அணியில் இடம்பிடிப்பதே இலக்கு...சந்திரன் ரஞ்சித் உற்சாகம்

சென்னை: புரோ கபடியில் அதிரடியாக புள்ளிகள் குவித்து வரும் தமிழக வீரர் சந்திரன் ரஞ்சித், ‘இந்திய அணியில் இடம் பிடிப்பதே இலக்கு’ என்று கூறியுள்ளார். புரோ கபடியில் கவனிக்கத்தக்க வீரராக வலம் வருகிறார் தமிழக வீரர் சந்திரன்  ரஞ்சித் (28வயது). நாகர்கோவிலை சேர்ந்த இவர் எளிமையான குடும்ப பின்னணியில் இருந்து வந்தவர். திருச்சி அஞ்சல் அலுவலகத்தில் பணியாற்றுகிறார்.  அதிரடி ஆட்டமான கபடியில் அலட்டிக் கொள்ளாமல் அமைதியாக புள்ளிகளை  குவிப்பதில் வல்லவராகத் திகழ்கிறார். புரோ கபடியில் 250 புள்ளிகளை கடந்த ஒரு சில வீரர்களில் ரஞ்சித்தும் ஒருவர். இப்போது டெல்லி தபாங் அணிக்காக விளையாடுகிறார். பாடிச் சென்று எதிரணி ஆட்களை ஆட்டமிழக்க செய்வதில்  மட்டுமல்ல, கிடுக்கிப்பிடியிலும் வல்லவர். சில நாட்களுக்கு முன்பு ஜெய்பூர் பிங்க் பேந்தர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஒரே ரெய்டில் தனது அணிக்கு 6 புள்ளிகளை பெற்றுதந்து வெற்றிக்கு காரணமாக இருந்தார்.  புரோ கபடி 6வது சீசனில் 61.25 லட்சத்துக்கு இவரை டெல்லி அணி  ஏலத்தில் எடுத்தது. இந்த சீசனிலும் ரஞ்சித்தை ஏலம் எடுக்க பல அணிகள் போட்டி போட்ட நிலையில், டெல்லி அணி ₹70 லட்சத்துக்கு மீண்டும் ஏலத்தில் எடுத்தது. அவர் நேற்று தினகரனுக்கு அளித்த சிறப்பு பேட்டியில் கூறியதாவது:அப்பா  தேங்காய் நார் உரிக்கும் தொழிலாளி. அம்மா வீட்டு வேலைகளை பார்த்துக் கொள்வார். நான், 2 தங்ககைள். நாகர்கோவிலில் எங்கள் பள்ளி அருகே தான் புகழ்பெற்ற ஆத்தங்கரை கபடி கிளப். அங்கு நடைபெறும் கபடி பயிற்சிகளை தினமும்  பார்ப்பேன். அப்படிதான் எனக்கு கபடியில் ஆர்வம் வந்தது. 6ம் வகுப்பு படிக்கும்போது அங்கே பயிற்சி பெற ஆரம்பித்தேன்.மாவட்ட அளவிலான போட்டிகளில் விளையாடியதால் புரோ கபடியில் வாய்ப்பு கிடைத்தது. முதல் 2 சீசன்களில் தெலுங்கு டைட்டன்ஸ் அணிக்காக விளையாடினேன். அதிக வாய்ப்புகள் கிடைக்காததால் திறமையை நிரூபிக்க முடியவில்லை. அடுத்த 2 சீசன்களும் ஏமாற்றமளித்தன. அப்போது ‘சென்னை ஹைடெக்’ கிளப்பில் விளையாட  ஆரம்பித்தேன். எனது ஆட்டத்தை பார்த்த குஜராத் அணி பயிற்சியாளர் மன்பிரீத் சிங் அவரது அணிக்கு என்னை தேர்வு செய்தார். 5வது சீசனில் மீண்டும் புரோ கபடியில் வாய்ப்பு கிடைத்தது. தற்போது 2 சீசனில் டெல்லி அணிக்காக  விளையாடுகிறேன்.தனிபட்ட முறையில் எனது புள்ளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று விளையாட மாட்டேன்.  அணி வெற்றி பெற வேண்டும் என்பதில் மட்டுமே கவனம் செலுத்துவேன். புரோ கபடி எனக்கு பெரிய அறிமுகத்தையும்,  உயர்வையும் தந்துள்ளது. சர்வதேச போட்டியில் விளையாடுவதற்கான இந்திய அணி நடத்திய 4 முகாம்களுக்கு தேர்வு ஆனேன். ஆனால் இதுவரை அணியில் இடம் கிடைக்கவில்லை. இந்திய அணியில் இடம் பிடிக்க வேண்டும் என்பதை  இலக்காக கொண்டு விளையாடி வருகிறேன்.

மூலக்கதை