சபாஷ் புவனேஷ்வர்! * இந்தியா அசத்தல் வெற்றி | ஆகஸ்ட் 12, 2019

தினமலர்  தினமலர்
சபாஷ் புவனேஷ்வர்! * இந்தியா அசத்தல் வெற்றி | ஆகஸ்ட் 12, 2019

போர்ட் ஆப் ஸ்பெயின்: விண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி ‘டக்வொர்த் லீவிஸ்’ விதிப்படி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ‘வேகத்தில்’ மிரட்டிய புவனேஷ்வர் குமார், 4 விக்கெட் சாய்த்து அசத்தினார். இந்திய அணி 1–0 என தொடரில் முன்னிலை பெற்றது.

விண்டீஸ் சென்ற இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி மழையால் ரத்தானது. இரண்டாவது போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் நடந்தது. முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 279 ரன்கள் எடுத்தது. கேப்டன் கோஹ்லி 120, ஸ்ரேயாஸ் 71 ரன்கள் எடுத்தனர்.

அடுத்து களமிறங்கிய விண்டீஸ் அணி துவக்கத்தில் அபாய கெய்ல் (11), ஷாய் ஹோப்பை (5) இழந்தது. 12.5 ஓவரில் 55/2 ரன்கள் எடுத்த போது மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. மீண்டும் போட்டி துவங்கிய போது ‘டக்வொர்த்-– லீவிஸ்’ விதிப்படி 46 ஓவரில் 270 ரன்கள் எடுக்க வேண்டும் என இலக்கு மாற்றப்பட்டது.

லீவிஸ் அரைசதம்

குல்தீப் ‘சுழலில்’ ஹெட்மயர் (18) சிக்கினார். இந்திய அணிக்கு எதிராக முதல் ஒருநாள் அரைசதம் எட்டிய லீவிஸ் (65), குல்தீப் பந்தில் அவுட்டானார். குல்தீப் பந்தை சிக்சருக்கு விரட்டிய பூரன், ஸ்கோரை வேகமாக உயர்த்த முயன்றார். விண்டீஸ் அணி ஒரு கட்டத்தில் 34 ஓவரில் 178/4 என வலுவான நிலையில் இருந்தது.

புவனேஷ்வர் திருப்பம்

கைவசம் 6 விக்கெட்டுகள் உள்ள நிலையில் 72 பந்தில் 92 ரன்கள் எடுத்தால் வெற்றி என இருந்தது. இந்நிலையில் புவனேஷ்வரை அழைத்தார் கோஹ்லி. இதற்கு கைமேல் பலன் கிடைத்தது. ‘வேகத்தில்’ மிரட்டிய புவனேஷ்வர், 35வது ஓவரின் 2வது பந்தில் பூரன் (42), 5வது பந்தில் ராஸ்டன் சேஸ் (18) என இருவரையும் அவுட்டாக்க, போட்டி இந்தியா பக்கம் திரும்பியது.

‘அதிரடி’ பிராத்வைட்டை, ஜடேஜா ‘டக்’ அவுட்டாக்கினார். காட்ரெல் (17), தாமஸ் (0) என இருவரையும், ஷமி ஒரே ஓவரில் வெளியேற்றினார்.

விண்டீஸ் அணி 42 ஓவரில் 210 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி தோல்வி அடைந்தது. புவனேஷ்வர் 4, குல்தீப் 2, ஷமி 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

மூன்றாவது போட்டி வரும் 14ல் நடக்க உள்ளது.

மூலக்கதை