பொருத்தமான ஸ்ரேயாஸ்! * கவாஸ்கர் கணிப்பு | ஆகஸ்ட் 12, 2019

தினமலர்  தினமலர்
பொருத்தமான ஸ்ரேயாஸ்! * கவாஸ்கர் கணிப்பு | ஆகஸ்ட் 12, 2019

 புதுடில்லி: ‘‘இந்திய அணியில் நான்காவது இடத்துக்கு ரிஷாப் பன்ட்டை விட, ஸ்ரேயாஸ் ஐயர் தான் பொருத்தமாக இருப்பார்,’’ என, முன்னாள் கேப்டன் கவாஸ்கர் தெரிவித்தார்.

ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு நான்காவது இடத்தில் களமிறங்க சரியான வீரர் இன்னும் கிடைக்கவில்லை. இந்த பலவீனம் காரணமாக கடந்த 2015, 2019 என இரண்டு உலக கோப்பை தொடரிலும் முக்கிய கட்டத்தில் இந்திய அணி சோபிக்க முடியவில்லை.

சமீபத்திய போட்டிகளில் களமிறங்கும் ரிஷாப் பன்ட் எதிர்பார்ப்பை நிறைவேற்ற தவறுகிறார். விண்டீஸ் அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் 5வதாக வந்த ஸ்ரேயாஸ் ஐயர், 68 பந்தில் 71 ரன் எடுத்தார்.

இதுகுறித்து கவாஸ்கர் கூறியது:

தோனி 5 அல்லது 6வது இடத்தில் களமிறங்கி சிறப்பாக போட்டியை ‘பினிஷிங்’ செய்து தருவார்.

என்னைப் பொறுத்தவரையில் இந்த இடத்துக்கு ரிஷாப் பன்ட் பொருத்தமாக இருப்பார். அடித்து விளையாட வேண்டும் என்ற அவரது இயற்கையான ஆட்டத்திறனுக்கு இது சரியாக இருக்கும்.

ரோகித், தவான், கோஹ்லி என மூவரும் சிறப்பாக செயல்பட்டு 40 முதல் 45 ஓவர்கள் விளையாடும் பட்சத்தில், பின் 4வது இடத்தில் ரிஷாப்பை களமிறக்கலாம். ஆனால் இன்னும் 30 முதல் 35 ஓவர்கள் மீதமுள்ள என்ற நேரத்தில் ரிஷாப்பை விட, ஸ்ரேயாஸ் ஐயர் தான் 4வது இடத்தில் களமிறங்க வேண்டும்.

ஏனெனில் தனது வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்டுள்ளார் ஸ்ரேயாஸ். 5வது இடத்தில், இவர் களமிறங்கிய போது அதிகமான ஓவர்கள் மீதமிருந்தன.   உலகின் சிறந்த வீரர் கோஹ்லி மறுமுனையில் விளையாட, அதைப் பார்த்து கற்றுக் கொண்டார். இவரது இந்த திறமை, ‘மிடில் ஆர்டரில்’ நிரந்தர இடத்தை பெற கைகொடுக்கும் என நினைக்கிறேன்.

இவ்வாறு கவாஸ்கர் கூறினார்.

மூலக்கதை