கோஹ்லி கலக்கல் சதம்: இந்திய அணி வெற்றி | ஆகஸ்ட் 11, 2019

தினமலர்  தினமலர்

போர்ட் ஆப் ஸ்பெயின்: விண்டீசுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் கேப்டன் கோஹ்லி சதம் கடந்து கைகொடுக்க இந்திய அணி ‘டக்வொர்த் லீவிஸ்’ முறைப்படி 59 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விண்டீஸ் அணியுடன் மோதுகிறது. முதல் போட்டி மழையால் பாதியில் கைவிடப்பட்டது. போர்ட் ஆப் ஸ்பெயினில் 2வது போட்டி நடந்தது. இந்திய அணியில் மாற்றம் செய்யப்படவில்லை. விண்டீஸ் அணியில் பேபியன் ஆலன் நீக்கப்பட்டு ஒஷேன் தாமஸ் சேர்க்கப்பட்டார். ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி, ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.

தவான் ஏமாற்றம்: இந்திய அணிக்கு துவக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. காட்ரெல் வீசிய முதல் ஓவரின் 3வது பந்தில் ஷிகர் தவான் (2) அவுட்டானார். அடுத்த வந்த கேப்டன் கோஹ்லி, கீமர் ரோச் வீசிய 2வது ஓவரில், 2 பவுண்டரி விளாசினார். இரண்டாவது விக்கெட்டுக்கு 74 ரன் சேர்த்த போது ராஸ்டன் சேஸ் ‘சுழலில்’ ரோகித் (18) சிக்கினார்.

கோஹ்லி அபாரம்: காட்ரெல், ராஸ்டன் சேஸ் பந்தில் தலா ஒரு பவுண்டரி அடித்த ரிஷாப் பன்ட் (20), கார்லஸ் பிராத்வைட் பந்தில் போல்டானார். அடுத்து வந்த ஸ்ரேயாஸ் ஐயர், கீமர் ரோச் வீசிய 29வது ஓவரில் 2 பவுண்டரி அடித்தார். தொடர்ந்து அசத்திய கோஹ்லி, ஹோல்டர் பந்தை சிக்சருக்கு பறக்கவிட்டார். அபாரமாக ஆடிய இவர், ஒருநாள் போட்டி வரலாற்றில் தனது 42வது சதத்தை பதிவு செய்தார். பொறுப்பாக ஆடிய ஸ்ரேயாஸ் ஐயர், தன்பங்கிற்கு அரைசதமடித்தார். நான்காவது விக்கெட்டுக்கு 125 ரன் சேர்த்த போது பிராத்வைட் பந்தில் கோஹ்லி (120) அவுட்டானார். ஹோல்டர் ‘வேகத்தில்’ ஸ்ரேயாஸ் (71) ‘பெவிலியன்’ திரும்பினார். கேதர் ஜாதவ் (16) ‘ரன் அவுட்’ ஆனார். புவனேஷ்வர் குமார் (1) ஏமாற்றினார்.

இந்திய அணி 50 ஓவரில், 7 விக்கெட்டுக்கு 279 ரன்கள் எடுத்தது. ரவிந்திர ஜடேஜா (16), முகமது ஷமி (3) அவுட்டாகாமல் இருந்தனர். விண்டீஸ் சார்பில் பிராத்வைட் 3 விக்கெட் வீழ்த்தினார்.

விண்டீஸ் அணி 42 ஓவரில், 210 ரன்களுக்கு ‘ஆல்–அவுட்டாகி’ தோல்வியடைந்தது. கேப்டன் ஹோல்டர் (13) அவுட்டாகாமல் இருந்தார். இந்தியா சார்பில் புவனேஷ்வர் 4 விக்கெட் கைப்பற்றினார். ஆட்ட நாயகன் விருதை இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி வென்றார்.

லாராவை முந்தினார் கெய்ல்

கிறிஸ் கெய்ல், தனது 7வது ரன்னை அடைந்த போது சர்வதேச ஒருநாள் போட்டி அரங்கில் அதிக ரன்கள் எடுத்த விண்டீஸ் வீரர்கள் பட்டியலில் ஜாம்பவான் லாராவை (10,348 ரன், 295 போட்டி) முந்தி முதலிடம் பிடித்தார். இதுவரை இவர், 300 போட்டியில் 10,353 ரன்கள் எடுத்துள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான 2வது போட்டி, கிறிஸ் கெய்ல் பங்கேற்ற 300வது ஒருநாள் போட்டி. இதன்மூலம் அதிக ஒருநாள் போட்டியில் விளையாடிய விண்டீஸ் வீரர்கள் பட்டியலில் லாராவை (299 போட்டி) முந்தி முதலிடம் பிடித்தார்.

மூலக்கதை