நாட்டின் தங்கம் இறக்குமதி 35.5 சதவீதம் அதிகரிப்பு

தினமலர்  தினமலர்
நாட்டின் தங்கம் இறக்குமதி 35.5 சதவீதம் அதிகரிப்பு

புதுடில்லி:தங்கம் இறக்குமதி, ஜூன் மாதத்துடன் முடிவடைந்த நடப்பு நிதியாண்டின், முதல் காலாண்டில், 35.5 சதவீதம் அதிகரித்துள்ளது.இது குறித்து, வர்த்தக அமைச்சகம் தெரிவித்து உள்ளதாவது:நடப்பு நிதியாண்டின், முதல் காலாண்டில், 80 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
இது, கடந்த ஆண்டை விட, 35.5 சதவீதம் அதிகம்.கடந்த, 2018- – 19ம் நிதியாண்டின், முதல் காலாண்டில், 59 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் இறக்குமதி செய்யப்பட்டது.தங்கம் இறக்குமதி அதிகரித்ததை அடுத்து, நாட்டின் வர்த்தக பற்றாக்குறை, 4,596 கோடி அமெரிக்க டாலர் அதிகரித்துள்ளது.
இதுவே, கடந்த நிதியாண்டின், முதல் காலாண்டில், 4,494 கோடி அமெரிக்க டாலராக இருந்தது.நடப்பு ஆண்டின், ஜனவரி மாதத்திலிருந்து பார்க்கும்போது, தங்கம் இறக்குமதி, இரட்டை இலக்க வளர்ச்சி பெற்றுள்ளது. ஆனால், பிப்ரவரி மாதத்தில் மட்டும், 11 சதவீதம் அளவுக்கு குறைந்தது.உலகில், அதிகளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில், இந்தியாவும் ஒன்று. பெரும்பாலும், ஆபரணத் தேவைக்காக ஆண்டுதோறும், 800- – 900 டன் தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது.இவ்வாறு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மூலக்கதை