தமிழில் அறிவியலைப் பரப்ப மத்திய அரசுத் துறையின் 'அறிவியல் பலகை' புதிய திட்டம்!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
தமிழில் அறிவியலைப் பரப்ப மத்திய அரசுத் துறையின் அறிவியல் பலகை புதிய திட்டம்!

தமிழில் அறிவியலைப் பரப்ப, மத்திய அரசின் அறிவியல் வளர்ச்சி நிறுவனமான விஞ்ஞான் பிரசார், தமிழ்மொழியில் ‘அறிவியல் பலகை’ என்னும் புதிய திட்டத்தை தொடங்கி உள்ளது.


தமிழ்மொழியில் அறிவியலை பரப்புவதற்காக ‘அறிவியல் பலகை’ என்னும் திட்டத்தை தொடங்கி உள்ளது.  இதன் மூலம் தமிழ்மொழியில் அறிவியல் கருத்துகளையும் கண்டுபிடிப்புகள் உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் பரப்புதல், பிரபலப்படுத்துதல் மற்றும் விரிவாக்கம் செய்யும் பணிகள் நடக்கும்.

இதை அடிப்படையாகக் கொண்டு தமிழகத்தில்  அறிவியல் கருத்தரங்கையும் இந்த விஞ்ஞான் பிரசார் அமைப்பு நடத்துகிறது. 

இது குறித்து மத்திய அரசின் விஞ்ஞான் பிரசார் அமைப்பின் இயக்குநர் நகுல்பராசர், விஞ்ஞான் பிரசார் அமைப்பின் விஞ்ஞானி டாக்டர் வெங்கடேஸ்வரன், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் செயல் இயக்குநர் சவுந்தரராஜ பெருமாள் ஆகியோர் சென்னையில் பத்திரிகை யாளர்களை சந்தித்துப் பேசினர். 

அப்போது விஞ்ஞான் பிரசார மையத்தின் இயக்குநர் நகுல்பராசர் கூறியதாவது:
கூகுள் இணைய சேவையில் பல்வேறு அறிவியல் தொடர்பான கருத்துகளை பார்ப்பவர்கள் இந்திய மொழிகளில் பெரும்பாலும் வங்கமொழி, மராத்தி, இந்தி மொழிகளை பயன்படுத்துகின்றனர். அதற்கு அடுத்ததாக தமிழ் மொழி உள்ளது. 

மூடப்பழக்கங்களின் அடிப்படையில் சொல்லப்படுகின்ற பல்வேறு அறிவியல் கருத்துகள் குறித்து அறிவியல் சார்ந்த விளக்கங்களை தமிழில் விளக்கும் வகையில் ஒரு திட்டம் கொண்டு  வரப்படுகிறது. இந்த திட்டத்துக்காக ‘அறிவியல் பலகை’ என்ற அமைப்பு தொடங்கப்படும். 

அதில் நவீன அறிவியல் வளர்ச்சி குறித்த விஷயங்கள் தமிழில் விளக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. பிற வெளி நாடுகளில் உள்ளதைப் போல இந்திய ஆய்வு நிறுவனங்கள் என்ன செய்துள்ளன என்பது குறித்தும் இந்த  அறிவியல் பலகையில் விளக்கப்படும். 

இதில் தூய அறிவியல் கருத்துகள் இடம்பெறும்.  பல்வேறு மொழி பேசும் நம் இளைஞர்கள் இன்று பெரும்பான்மையாக உள்ளனர். 
கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு அவர்கள் விரும்பும் வகையில் அச்சு மற்றும் டிஜிட்டல் ஊடக முறைகளைக் கையாண்டு அறிவியல் சிந்தனைகளை  பரப்புவதற்காக அமைக்கப்பட்டதே இந்திய அரசின் விஞ்ஞான் அமைப்பு.  

இந்திய மொழிகளில் அறிவியலை பரப்பும் மொழியில் தமிழ்மொழி என்பது முதன்மையாக இருக்கிறது. காலத்திற்கு ஏற்ப தன்னை புதுப்பித்துக் கொள்ளும் இளமை தமிழுக்கு என்றும் உண்டு. விஞ்ஞான் பிரசார் அமைப்பின் தமிழ் அறிவியல் பலகை என்ற திட்டத்தின் கீழ் தமிழகத்தில் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என்று நான்கு பிரிவுகள் பிரிக்கப்பட்டு இந்த ஆண்டில் 32 மாவட்டங்களிலும் தமிழில் அறிவியல் பிரசாரம் சென்று சேரும் வகையில் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.  

தமிழகத்தில் அறிவியலை பொதுச் சிந்தனையில் தொடர்ந்து புகுத்தி புதியதோர் அறிவியல் அலையை உருவாக்கும் நோக்கில் செயல்படும். 
இதையடுத்து  சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இரண்டு நாள் அறிவியல் கருத்தரங்கு நடக்கிறது.  சந்திரயான் திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டு கருத்தரங்கை தொடங்கி வைக்கிறார்

மூலக்கதை