ஒசாமா பின் லேடன் மகன் கொலை... அமெரிக்க புலனாய்வு அமைப்பு தகவல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஒசாமா பின் லேடன் மகன் கொலை... அமெரிக்க புலனாய்வு அமைப்பு தகவல்

வாஷிங்டன்: ஒசாமா பின் லேடனின் மகன் ஹம்சா பின்லேடன் கொல்லப்பட்டதை அமெரிக்க புலனாய்வுப்பிரிவு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். ஆனால் அவர் எங்கு, எப்போது கொல்லப்பட்டார் என்ற தகவலை அவர்கள் வெளியிடவில்லை.

ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானின் அபோதாபாத் நகரில் 2011ம் ஆண்டு கொல்லப்பட்டபோது, அந்த வீட்டில் இருந்து பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அதனடிப்படையில் ஹம்சா பின்லேடன், ஒசாமா பின் லேடனின் 20 குழந்தைகளில் 15வது குழந்தை என்பது தெரியவந்தது.

ஒசாமா பின்லேடனின் 3வது மனைவிக்கு பிறந்த மகன் ஹம்சா பின்லேடன். அல் - கொய்தா தலைவர் ஒருவரின் மகளுடன் ஹம்சா பின்லேடனுக்கு திருமணம் நடந்தது தொடர்பான வீடியோ ஆதாரங்களும் கைப்பற்றப்பட்டது.

தற்போது 30 வயதை நெருங்கும் ஹம்சா பின்லேடன் அல் - கொய்தாவின் வளர்ந்து வரும் தலைவராக கருதப்பட்டதை அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

2016ம் ஆண்டு அல்-கொய்தா வெளியிட்ட வீடியோ ஒன்றில் தீவிரவாத அமைப்புகள் சிரியாவில் ஒன்று கூடி போர் தொடுக்க வேண்டும் என்று ஹம்சா பின்லேடன் பேசியிருந்தார். ஹம்சா பின்லேடன் எங்கிருக்கிறார் என்பது மர்மமாகவே இருந்தது.

ஈரானில் ஹம்சா பின்லேடன் சிறை வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. அதே நேரத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், சிரியாவில் எங்காவது மறைந்திருக்க வாய்ப்புள்ளதாக புலனாய்வு அமைப்புகள் மூலம் அமெரிக்காவுக்கு தகவல் கிடைத்தது.

இதனால் உலக அளவில் ஹம்சா பின்லேடனுக்கு அமெரிக்கா வலை வீசியது.

இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் ஹம்சா பின்லேடனை உயிருடனோ, பிணமாகவோ ஒப்படைப்பவர்களுக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் பரிசளிப்பதாக அமெரிக்கா அறிவித்தது. இந்நிலையில் தற்போது ஹம்சா பின்லேடன் கொல்லப்பட்டதாக அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

ஆனால் ஹம்சா பின்ேலடன் எங்கு, எப்போது கொல்லப்பட்டான் என்பது தொடர்பான தகவல்களை அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள் வெளியிடவில்லை. அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்த செய்தியை ஏற்கவும் இல்லை, மறுக்கவும் இல்ைல.

இந்த விவகாரத்தில் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.

.

மூலக்கதை