அயோத்தியில் 251 மீட்டர் உயரத்தில் ராமர் சிலை அமைக்க உத்தரப்பிரதேச அரசு முடிவு...விரைவில் பணிகள் தொடக்கம் என தகவல்

தினகரன்  தினகரன்
அயோத்தியில் 251 மீட்டர் உயரத்தில் ராமர் சிலை அமைக்க உத்தரப்பிரதேச அரசு முடிவு...விரைவில் பணிகள் தொடக்கம் என தகவல்

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் 251 மீட்டர் உயரம் கொண்ட ராமர் சிலையை அமைக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. இது  தொடர்பாக நேற்று முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உயர் மட்ட குழுவுடன் ஆலோசனை நடத்தினார். குஜராத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல்  சிலை 182 மீட்டர் உயரம் கொண்டது. இதுதான் தற்போது வரை உலகிலேயே அதிக உயரம் கொண்டதாக கருதப்படுகிறது. அயோத்தியில் அமைய  உள்ள ராமர் சிலை 251 மீட்டர் என்பதால், உலகிலேயே அதிக உயரம் கொண்ட சிலையாக இது கருதப்படும்.இதற்காக சரயு நதிக்கரையில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவுக்கொண்ட நிலம் ஒதுக்கப்பட்டு விரைவில் சிலை அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட  உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இங்கு சிலை மட்டுமல்லாது அருங்காட்சியகம், உணவகங்கள், ராமர் குடில், வேத நூலகம், பசு தொழுவம்,  வனவாசம் போன்ற தோட்டம், குருகுலம், கலையரங்கம், குரங்குகளுக்கான மருத்துவமனை உள்ளிடவைகளும் அமைக்கப்படும் என கூறப்படுகிறது.இதற்காக, சுமார் 2500 கோடி நிதி ஒதுக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இதற்கிடையே, உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பழமை வாய்ந்த பாபர் மசூதி கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி இடிக்கப்பட்டது.  இதுதொடர்பான வழக்கில் பாஜக மூத்த தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்டோரை ரேபர்லி நீதிமன்றம்  விடுதலையை அலகாபாத் உயர்நீதிமன்றமும் உறுதி செய்தது. இதனையடுத்து பாஜக தலைவர்கள் விடுவிப்பை எதிர்த்து சி.பி.ஐ உச்சநீதிமன்றத்தில்  வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்டோருக்கு எதிராக மீண்டும் விசாரணை நடத்த  உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. விசாரணையை விரைவில் முடித்து இரு ஆண்டுகளுக்குள் தீர்ப்பு அளிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம்  அறிவுறுத்தியது. அதன்படி லக்னோ சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் பாபர் மசூதி இடிப்பு வழக்கு மீதான விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த  வழக்கினை சிபிஐ நீதிமன்றம் 9 மாதத்தில் விசாரித்து முடிக்க கடந்த 19-ம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மூலக்கதை