டிஎன்பிஎல் டி20 லீக் ஆட்டம் மதுரையை வீழ்த்தியது திண்டுக்கல்: இன்றிரவு சேப்பாக் - திருச்சி அணிகள் மோதல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
டிஎன்பிஎல் டி20 லீக் ஆட்டம் மதுரையை வீழ்த்தியது திண்டுக்கல்: இன்றிரவு சேப்பாக்  திருச்சி அணிகள் மோதல்

திருநெல்வேலி: திருநெல்வேலி இந்தியா சிமெண்ட்ஸ் மைதானத்தில் நேற்றிரவு, டிஎன்பிஎல் டி20 லீக் ஆட்டம் நடந்தது. மதுரை பேந்தர்ஸ் - திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதின.

டாஸ் வென்ற மதுரை பேந்தர்ஸ் பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து திண்டுக்கல் தரப்பில் ஹரி நிஷாந்த் - என். ஜெகதீசன் ஜோடி களமிறங்கியது.

இரு வீரர்களும் தொடக்கம் முதலே அபாரமாக ஆடி 104 ரன்கள் சேர்த்த நிலையில் ஹரி நிஷாந்த் 3 சிக்ஸர், 4 பவுண்டரியுடன் 47 பந்துகளில் 57 ரன்களை விளாசி அவுட்டானார். அவருக்கு பின் வந்த கேப்டன் அஸ்வின் 16, விவேக் 2, சதுர்வேதி 1, சுமந்த் ஜெயின் 0, முகமது 13 என சொற்ப ரன்களுக்கு அவுட்டாகினர்.

மறுமுனையில் அற்புதமாக ஆடிய ஜெகதீசன் 1 சிக்ஸர், 12 பவுண்டரியுடன் 51 பந்துகளில் 87 ரன்களை விளாசி அவுட்டாகாவில்லை. இறுதியில் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 182 ரன்களை திண்டுக்கல் டிராகன்ஸ் குவித்தது.

மதுரை தரப்பில் ரஹில் ஷா 3-21, கிரண் ஆகாஷ் 2-33 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

தொடர்ந்து ஆடிய மதுரை பேந்தர்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 152 ரன்களை மட்டுமே எடுத்தது. அருண் கார்த்திக் 24, சரத் ராஜ் 26, அபிஷேக் தன்வர் 24, மிதுன் 20 ஆகியோர் மட்டுமே ஓரளவு ரன்களை சேர்த்தனர்.

மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு அடுத்தடுத்து வெளியேறினர். திண்டுக்கல் அணியின் பவுலர்கள் சிலம்பரசன் 4-20, அஸ்வின் 3-16 என்ற அடிப்படையில் விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

ஆட்டநாயகனாக ஜெகதீசன்  தேர்வு செய்யப்பட்டார்.

இன்றிரவு 7. 15 மணிக்கு திருநெல்வேலி இந்தியா சிமெண்ட்ஸ் மைதானத்தில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன.

.

மூலக்கதை