மக்களவையில் கடும் எதிர்ப்புக்கிடையே ஆர்டிஐ திருத்த மசோதா நிறைவேற்றம்

தினகரன்  தினகரன்
மக்களவையில் கடும் எதிர்ப்புக்கிடையே ஆர்டிஐ திருத்த மசோதா நிறைவேற்றம்

புதுடெல்லி: மக்களவையில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே தகவல் அறியும் உரிமை சட்ட திருத்த மசோதா நேற்று நிறைவேற்றப்பட்டது. இதேபோல, மாநிலங்களவையில் சர்ச்சைக்குரிய மனித உரிமை பாதுகாப்பு சட்ட திருத்த மசோதாவும் நிறைவேற்றப்பட்டது. மக்களவை நேற்று காலை கூடியதும், தற்போதைய எம்பி லோக் ஜனசக்தி கட்சியின் ராமசந்திர பஸ்வான் (ராம்விலாஸ் பஸ்வானின் சகோதரர்) மற்றும் டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு, அவையை பிற்பகல் 2 மணி வரை சபாநாயகர் ஓம் பிர்லா ஒத்திவைத்தார். வழக்கப்படி, தற்போதைய எம்பி காலமானால், நாள் முழுவதும் அவை ஒத்தி வைக்கப்படும். இதை சபாநாயகர் மீறுவதாக காங்கிரஸ் எம்பிக்கள் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து, பிற்பகல் 2 மணிக்கு அவை தொடங்கியதும், தகவல் அறியும் உரிமை சட்ட திருத்த மசோதா மீதான விவாதம் தொடங்கியது. இந்த சட்ட திருத்தத்தில், தலைமை தகவல் ஆணையர் மற்றும் தகவல் ஆணையர்களின் நிர்ணயிக்கப்பட்ட பதவிக்கால முறையை மாற்றுவது, தலைமை தகவல் ஆணையரின் சம்பளத்தை அரசே நிர்ணயிப்பது என்ற மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. தற்போது, தகவல் ஆணையர்களின் பதவிக்காலம் 5 ஆண்டாகவும், அவர்களுக்கு தேர்தல் ஆணையர்களுக்கு இணையான சம்பமும் வழங்கப்பட்டு வருகிறது. இதை மாற்றுவதால், ஆர்டிஐ சட்டம் பலவீனப்படும் என காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ஏற்கனவே பாஜ தலைமையிலான ஆட்சியில் பல்வேறு ஆர்டிஐ மனுக்களுக்கு உரிய தகவல் தராமல் நிராகரிக்கப்படும் நிலையில், இந்த சட்ட திருத்தத்தால், அவசியமான ஆர்டிஐ சட்டம் வலுவிழந்து வெளிப்படைத்தன்மையை இழந்துவிடும் என எதிர்க்கட்சி எம்பிக்கள் கவலை தெரிவித்தனர். இந்த அரசில் ஆர்டிஐ ஆர்வலர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை நிலவுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர். மேலும், ஆர்டிஐ சட்ட திருத்த மசோதாவை அரசு திரும்ப பெற வேண்டும், இதனை நாடாளுமன்ற குழுவுக்கு அனுப்பி ஆய்வு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் ஜிதேந்திரா சிங், ‘‘இந்த சட்ட திருத்த மசோதாவால் ஆர்டிஐ சட்டம் வலுவிழந்து விடும் என்பது தவறான புரிதலாகும். இம்மசோதாவில் எளிமையான சில மாற்றங்களே செய்யப்படுகின்றன. அதை தவிர்த்து, ஆர்டிஐயின் அதிகாரத்தில் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை. எனவே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்’’ என்றார். இதைத்தொடர்ந்து, குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், சட்ட திருத்தத்துக்கு ஆதரவாக 218 பேரும், எதிராக 79 பேரும் வாக்களித்தததைத் தொடர்ந்து, ஆர்டிஐ திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இதேபோல, 63 ஆண்டாக நடைமுறையில் உள்ள இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு மாற்றாக தேசிய மருத்துவ ஆணையத்தை கொண்டு வருவதற்கான மசோதாவை மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தனும், மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதாவை மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரியும் மக்களவையில் தாக்கல் செய்தனர். மருத்துவ கல்லூரிகளை நிர்வகித்து வரும் இந்திய மருத்துவ கவுன்சிலில் பல்வேறு ஊழல்கள் நடப்பதால், 63 ஆண்டாக நடைமுறையில் உள்ள இக்கவுன்சிலை கலைத்துவிட்டு, தேசிய மருத்துவ ஆணையம் கொண்டு வர அரசு முடிவு செய்துள்ளது. இம்மசோதாவில் எம்பிபிஎஸ் படிப்பின் இறுதி தேர்வு, நெக்ஸ்ட் (நேஷனல் எக்சிட் டெஸ்ட்) என்ற பெயரில் பொதுத் தேர்வாக நடத்த திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் எம்.பி.பி.எஸ் முடித்தவர்கள் சிகிச்சை அளிப்பதற்கான லைசென்ஸ் பெற தனி தேர்வு எழுத தேவையில்லை. வெளிநாட்டில் மருத்துவ படிப்பு முடித்தவர்களும் இந்த நெக்ஸ்ட் தேர்வை எழுதி இந்தியாவில் சிகிச்சை அளிக்க லைசென்ஸ் பெறலாம். மோட்டார் வாகன சட்டதிருத்த மசோதாவில் விதிமீறும் வாகன ஓட்டிகளுக்கு பலமடங்கு அபராதத்தை உயர்த்தும் அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.மக்களவையில் ஒரே நாளில் 3 சர்ச்சைக்குரிய மசோதாக்கள் கொண்டு வரப்பட்ட நிலையில், மாநிலங்களவையில் மனித உரிமை பாதுகாப்பு சட்ட திருத்த மசோதாவுக்கும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மாநிலங்களவை நேற்று காலை கூடியதும், கர்நாடகா விவகாரம், உபியின் சோன்பத்ரா விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால் மாலை 3 மணி வரை அவை 2 முறை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர், மாலை 3 மணிக்கு அவை தொடங்கியதும், மனித உரிமை பாதுகாப்பு சட்ட திருத்த மசோதா மீதான விவாதம் தொடங்கியது. இந்த மசோதாவில் தேசிய மனித உரிமை ஆணையம் மற்றும் மாநில மனித உரிமை ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளில் யாராவது ஒருவரை தலைவராக நியமிக்கலாம், தலைவரின் பதவிக்காலம் 3 ஆண்டாக குறைப்பது, ஒரே நபரை மீண்டும் தலைவர் பதவியில் நீட்டிப்பது உள்ளிட்ட மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. திமுக எம்பி திருச்சி சிவா பேசுகையில், ‘‘எந்த நீதிபதியையும் தலைவராக்கலாம் என்பது தவறாக பயன்படுத்தப்படக்கூடும். தலைவரின் பதவிக்கலாம் 5 ஆண்டிலிருந்து 3 ஆண்டாக குறைப்பதாலும், ஒரே நபரையே மீண்டும் தலைவராக நீட்டிக்கும் அம்சமும் அரசுக்கு சாதகமான நபரை அப்பதவியில் அமர்த்த வழிவகுக்கும்’’ என்றார். இதே கருத்தையே அனைத்து எம்பிக்களும் வலியுறுத்தினர்.  இறுதியில் குரல் வாக்கெடுப்பு மூலம் மனித உரிமை பாதுகாப்பு சட்ட திருத்த மசோதாவும் நிறைவேற்றப்பட்டது.கூட்டத்தொடரை நீட்டிக்க எதிர்ப்பு17வது மக்களவையின் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் கடந்த ஜூன் 17ம் தேதி தொடங்கி வரும் 26ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் இப்போதுதான் முதல் முறையாக அதிக நேரம் அவை நடத்தப்பட்டு பல்வேறு மசோதாக்கள் தாக்கல் செய்தும், நிறைவேற்றப்பட்டும் உள்ளது. ஆனாலும், இன்னும் பல மசோதாக்கள் நிலுவையில் இருப்பதால், கூட்டத்தொடரை ஆகஸ்ட் 2ம் தேதி வரை நீட்டிக்க அரசு தரப்பில் பரிந்துரைக்கப்பட்டது. இது குறித்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையிலான அலுவல் ஆலோசனை குழு கூட்டத்தில் நேற்று தெரிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் அதிருப்தி தெரிவித்தன. கூட்டத்தொடரை நீட்டிப்பதில் தங்களுக்கு விருப்பமில்லை என கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.சந்திரயான்-2; எம்பிக்கள் பாராட்டு:நிலவை ஆய்வு செய்ய சந்திரயான்-2 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் ஏவிய இஸ்ரோவுக்கு மாநிலங்களவை எம்பிக்கள் நேற்று பாராட்டு தெரிவித்தனர். மாநிலங்களவையில் அவை தலைவர் வெங்கையா நாயுடு, சந்திரயான்-2 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதாக கூறியதைத் தொடர்ந்து அனைத்து எம்பிக்களும் கைதட்டி, இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவித்தனர்.நாடாளுமன்றம் வந்தார் வைகோ:நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக வரும் 25ம் தேதி பதவியேற்க உள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று டெல்லி வந்தார். அவருக்கு மதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். நாடாளுமன்றத்துக்கு நேற்று வந்த வைகோ அங்கு நுழைவு வாயிலில் உள்ள அண்ணா, காமராஜர், முத்துராமலிங்க தேவர் ஆகியோரின் சிலைகளுக்கு மரியாதை செலுத்தினார்.

மூலக்கதை