மும்பை எம்டிஎன்எல் அலுவலகத்தில் பயங்கர தீ விபத்து 84 பேர் மீட்பு

தினகரன்  தினகரன்
மும்பை எம்டிஎன்எல் அலுவலகத்தில் பயங்கர தீ விபத்து 84 பேர் மீட்பு

மும்பை: மும்பை கட்டிடம் ஒன்றில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் 84 பேர் பத்திரமாக மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மும்பை மேற்கு புறநகர் பகுதியான பாந்த்ராவில் 9 மாடிகள் கொண்ட எம்.டி.என்.எல். டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் கட்டிடம் உள்ளது. நேற்று வேலை நாள் என்பதால் அந்த கட்டிடத்தில் ஏராளமான ஊழியர்கள் இருந்தனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் எம்.டி.என்.எல். ஊழியர்கள். பிற்பகல் 3 மணியளவில் இந்த கட்டிடத்தில் திடீரென தீப்பிடித்துக் கொண்டது. தகவல் கிடைத்ததும் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்தனர். கட்டிடத்தின் மூன்றாவது மற்றும் நான்காவது மாடிகள் தீப்பிடித்து எரிந்தன. அந்த பகுதி முழுவதும் ஒரே புகைமூட்டமாக காணப்பட்டது. தீயணைப்பு படையினர் அந்த கட்டிடத்தில் சிக்கியவர்களை காப்பாற்றுவதற்காக ஆக்சிஜன் முகமூடி அணிந்தும், டார்ச் லைட்களுடனும் உள்ளே புகுந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். தீயை அணைக்க 14 தீயணைப்பு வண்டிகள், வாட்டர் டேங்கர்கள் மற்றும் ஒரு ரோபோட் வேன் உள்ளிட்ட இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. தீப்பிடித்த கட்டிடத்தில் சிக்கிய 84 பேரை யும் தீயணைப்பு படையினர் உயிருடன் மீட்டனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் கட்டிடத்தின் மொட்டை மாடியில் தஞ்சமடைந்து இருந்தவர்கள். உயரமான ஏணி உதவியுடன் தீயணைப்பு படையினர் அவர்களை மீட்டனர்.  மீட்பு பணியின்போது புகைமூட்டத்தில் பாதிப்படைந்த தீயணைப்புப் படை வீரர்கள்  2 ேபர் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். கட்டிடத்தில் இருந்து பத்திரமாக வெளியேறி வந்த பெண் ஒருவர் கூறும்போது, “ஐந்தாவது மாடியில் இருந்து லிப்ட் மூலம் கீழே வந்தோம். அப்போது தீயணைப்பு படையினர் புகைமூட்டம் நிறைந்த மாடியில் இருந்து சிலரை தூக்கிக் கொண்டு வருவதைப் பார்த்தோம்” என்றார்.

மூலக்கதை