மேற்குவங்கம், கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் பாரம்பரிய ஓட்டு வங்கியை மீட்க வேண்டும்; இந்திய கம்யூனிஸ்ட் அறிக்கை

தினகரன்  தினகரன்
மேற்குவங்கம், கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் பாரம்பரிய ஓட்டு வங்கியை மீட்க வேண்டும்; இந்திய கம்யூனிஸ்ட் அறிக்கை

புதுடெல்லி: மேற்குவங்கம், கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் பாரம்பரிய ஓட்டு வங்கியை மீட்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 3 நாள் தேசிய கவுன்சில் கூட்டம் நேற்று முன்தினம் முடிந்தது. இதில் டி.ராஜா பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இந்த கூட்டத்துக்குப்பின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு அரசியல் ரீதியாக மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. மக்களவையில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இதுவரை இல்லாத அளவுக்கு மிகக் குறைந்த பிரதிநிதித்துவம் உள்ளது. இது மிகப்பெரிய சவால். இதனால் கம்யூனிஸ்ட் கட்சி ஏமாற்றம் அடைந்துள்ளது. தேர்தலில் வெற்றி, தோல்வி சகஜம். ஆனால் நமது ஓட்டு வங்கி மிகப் பெரியளவில் குறைந்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. இது அபாயகரமானது. மேற்குவங்கத்தில் நமது ஓட்டு வங்கி 25 சதவீதத்திலிருந்து 7 சதவீதமாக குறைந்துள்ளது. கேரளாவில், ஐக்கிய ஜனநாயக முன்னணி 47 சதவீத வாக்குகளும், இடது ஜனநாயக முன்னணி 35 சதவீத வாக்குகளும் பெற்றுள்ளன. இது மிகப்பெரிய இடைவெளி. இரு கட்சிகளுக்கும் 2 சதவீத வித்தியாசத்துக்கு மேல் ஒருபோதும் இருந்ததில்லை. நமது ஓட்டு வங்கி ஏன் சரிந்தது என நாம் ஆய்வு செய்ய வேண்டும். இது மிகப்பெரிய சவால். இதை நாம் சந்தித்து மீளவேண்டும். எதிர்க்கட்சிகள் பல ஒன்றிணைய விரும்பின. ஆனால் சில தலைவர்களின் சுயநலன்களால் இது தோல்வியில் முடிந்தது. மதச்சார்பற்ற கட்சிகளுக்கும், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் நல்ல புரிதல் ஏற்பட்டும், பல மாநிலங்களில் இது வெற்றியடையவில்லை. பா.ஜ.வுக்கு எதிரான அரசியல் சூழல் உருவாகியும், மக்களவை தேர்தலில் பா.ஜ வெற்றி பெற்றுவிட்டது. காரணம் மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைய மறுத்துவிட்டன. தமிழ்நாட்டை தவிர மற்ற மாநிலங்களில் மதச்சார்பற்ற கட்சிகள் இடையே ஒரே மாதிரியான புரிதல் இல்லை. பல மாநிலங்களில் 44 சிறு கட்சிகளை பா.ஜ வசப்படுத்தி வைத்துள்ளது. தமிழகத்தில் அரசு இயந்திரத்தை தவறாக பயன்படுத்த அதிமுகவை, பாஜ கட்டாயப்படுத்துகிறது. தமிழகத்தில் அதிமுக உட்பட பல கட்சிகளுடன் பாஜ புரிதலுடன் செயல்படுகிறது. தே.ஜ கூட்டணியில் பிற கட்சிகளை இணைக்க பாஜ அதிகளவில் பணம் செலவு செய்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. உ.பி.யில் பல சிறு கட்சிகளை பாஜ தங்கள் அணியில் இணைத்துள்ளது. பல வேட்பாளர்கள் பாஜ சின்னத்தில் போட்டியிட கட்டாயப்படுத்தப்பட்டனர். தேர்தல் பாண்டுகள் மூலம் கார்பரேட் நிறுவனங்களிடம் இருந்து பாஜ.வால் அதிக பணம் பெற முடிந்தது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை