‘தில்லுக்கு’ திண்டுக்கல்! *மதுரையை வீழ்த்தியது | ஜூலை 22, 2019

தினமலர்  தினமலர்
‘தில்லுக்கு’ திண்டுக்கல்! *மதுரையை வீழ்த்தியது | ஜூலை 22, 2019

திருநெல்வேலி: டி.என்.பி.எல்., தொடரில் இரண்டாவது வெற்றி பெற்றது திண்டுக்கல் அணி. நேற்று நடந்த லீக் போட்டியில் நிஷாந்த், ஜெகதீசன் அரைசதம் அடித்து கைகொடுக்க, மதுரை அணியை 30 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

தமிழகத்தில் ‘டி.என்.பி.எல்.,’ தொடரின் நான்காவது சீசன் தற்போது நடக்கிறது. நேற்று திருநெல்வேலியில் நடந்த லீக் போட்டியில் அஷ்வின் தலைமையிலான திண்டுக்கல் அணி, நடப்பு சாம்பியன் மதுரையை சந்தித்தது. ‘டாஸ்’ வென்ற மதுரை அணி பீல்டிங் தேர்வு செய்தது.

நிஷாந்த் அபாரம்

திண்டுக்கல் அணிக்கு நிஷாந்த், ஜெகதீசன் ஜோடி சூப்பர் துவக்கம் கொடுத்தது. பவுண்டரி மழை பொழிந்த நிஷாந்த், 42வது பந்தில் அரைசதம் எட்டினார். முதல் விக்கெட்டுக்கு 13.2 ஓவரில் 104 ரன்கள் சேர்த்த போது, நிஷாந்த் (57 ரன், 47 பந்து) அவுட்டானார். ஜெகதீசனுடன் இணைந்தார் கேப்டன் அஷ்வின்.

ஜெகதீசன் துணிச்சல்

மோசஸ் பந்தை சிக்சருக்கு விரட்டிய ஜெகதீசன், அரைசதம் கடந்தார். இதே ஓவரில் அஷ்வினும் பவுண்டரி, சிக்சர் என அடிக்க, 15வது ஓவரில் திண்டுக்கல் அணிக்கு 24 ரன்கள் கிடைத்தது. அஷ்வின் (16 ரன், 7 பந்து), விவேக் (2) ஏமாற்றினர்.

சதுர்வேதி (1), சுமந்த் (0) விரைவில் கிளம்பினர். முகமது 13 ரன்னுக்கு (5 பந்து) அவுட்டானார். கடைசி ஓவரில் ஜெகதீசன் ‘ஹாட்ரிக்’ பவுண்டரி அடித்தார். திண்டுக்கல் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 182 ரன்கள் குவித்தது. ஜெகதீசன் (87), ரோகித் (1) அவுட்டாகாமல் இருந்தனர்.

அஷ்வின் கலக்கல்

கடின இலக்கைத் துரத்திய மதுரை அணிக்கு கேப்டன் அருண் கார்த்திக் (24), சரத் (26) ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. பின் கவுஷிக் (17), நிலேஷ் (11), சந்திரன் (11) என ஏமாற்றினர். ஆகாஷ் (10), தன்வர் (17), மிதுன் (20) நீடிக்கவில்லை. 20 ஓவரில் மதுரை அணி 9 விக்கெட்டுக்கு 152 ரன்கள் எடுத்து 30 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது. திண்டுக்கல் அணியின் சிலம்பரசன் 4, அஷ்வின் 3 விக்கெட் சாய்த்தனர்.

 

11

டி.என்.பி.எல்., அரங்கில் தனது 11வது அரைசதம் அடித்தார் திண்டுக்கல் வீரர் ஜெகதீசன். தவிர இத்தொடரில் அதிக அரைசதம் அடித்த மதுரை வீரர் அருண் கார்த்திக்கை (11) சமன் செய்தார்.

 

100

டி.என்.பி.எல்., தொடர் கடந்த 2016ல் துவங்கப்பட்டது. இதில் 31 போட்டிகள் நடந்தன. அடுத்து 2017ல் 32, 2018ல் 32 என, மூன்று சீசனில் 95 போட்டிகள் நடந்தன. தற்போது 4வது சீசன் 5 வது லீக் போட்டி நேற்று திருநெல்வேலியில் நடந்தது. இது டி.என்.பி.எல்., வரலாற்றில் 100வது போட்டி என்ற பெருமை பெற்றது.

 

1000

டி.என்.பி.எல்., அரங்கில் 1000 ரன்கள் எட்டிய முதல் வீரர் ஆனார் ஜெகதீசன். திண்டுக்கல்லை சேர்ந்த இவர், இதுவரை 25 போட்டிகளில் 1,008 ரன்கள் எடுத்துள்ளார்.

மூலக்கதை