தவான், கார்த்திக் எதிர்காலம் * டெஸ்ட் அணியில் ‘கல்தா’ | ஜூலை 22, 2019

தினமலர்  தினமலர்
தவான், கார்த்திக் எதிர்காலம் * டெஸ்ட் அணியில் ‘கல்தா’ | ஜூலை 22, 2019

புதுடில்லி: விண்டீஸ் செல்லும் இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இதில் மயங்க் அகர்வால், ரிஷாப் பன்ட், தீபக் சகார், ராகுல் சகார், குர்னால் பாண்ட்யா என இளம் வீரர்கள் சேர்க்கப்பட்டனர். இதனால் ஷிகர் தவான், தினேஷ் கார்த்திக் உள்ளிட்ட சீனியர்கள் மீண்டும் அணிக்கு திரும்புவது என்பது இயலாக காரியம் போலத் தெரிகிறது.

ஏனெனில், மூன்று வித கிரிக்கெட்டிலும் துவக்க வீரராக இருந்தவர் ஷிகர் தவான். தற்போது துரதிருஷ்டவசமாக ஒரு நாள் அணிக்கு மட்டுமே தேர்வாகிறார். டெஸ்டில் சிறப்பாக செயல்பட்டாலும் சுவிங் பந்துகளில் அவுட்டாகி விடுவது பலவீனம். இதனால் பிரித்வி ஷா, மயங்க் அகர்வால், லோகேஷ் ராகுலுக்கு வாய்ப்பு செல்கிறது.

இதேபோல விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன், தமிழகத்தின் தினேஷ் கார்த்திக் நிலையும் பரிதாபமாக உள்ளது.  இவரது கிரிக்கெட் வாழ்க்கையில் இந்திய அணியில் நிலையாக இருந்தது இல்லை. உலக கோப்பை தொடரில் பங்கேற்றாலும் 2 போட்டியில் தான் களமிறங்கினார்.

தற்போது ரிஷாப் பன்ட் எழுச்சி, அடுத்து இஷான் கிஷான், சஞ்சு சாம்சன் என இருப்பதால் 34 வயதான கார்த்திக்கின் இந்திய அணி கனவு ஏறக்குறைய முடிவுக்கு வந்து விட்டது.

அடுத்து, இந்திய டெஸ்ட் அரங்கில் சேவக்கிற்கு அடுத்து முச்சதம் அடித்தவர் கருண் நாயர், 27. ரகானேவுக்கு இடம் செல்ல, பார்மில் இருந்த போதும் நீக்கப்பட்டார். அடுத்து மோசமான ஐ.பி.எல்., மற்றும் ரஞ்சி டிராபி தொடர்களால், பெரும் சிக்கல் ஏற்பட்டது.

ரோகித், ராகுல், மயங்க் அகர்வால், ரகானே என பலர் உள்ள நிலையில் டெஸ்ட் அணியில், இவர்கள் இடம் பெறுவது மிக கடினம் தான்.

மூலக்கதை