கூடுதல் நிதி! புதுச்சேரியில் நீர் மேலாண்மை பணிகளுக்கு செலவிட... மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்து அரசு தீர்மானம்

தினமலர்  தினமலர்
கூடுதல் நிதி! புதுச்சேரியில் நீர் மேலாண்மை பணிகளுக்கு செலவிட... மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்து அரசு தீர்மானம்

புதுச்சேரி : புதுச்சேரி நீர் மேலாண்மைக்கும், நீர்வளப் பாதுகாப்பிற்கும் கூடுதல் நிதி வழங்குமாறு மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்து, புதுச்சேரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
புதுச்சேரி சட்டசபையின் சிறப்பு கூட்டத் தொடர் நேற்று துவங்கியது. புதுச்சேரியில் நீர் வளத்தை பாதுகாப்பது தொடர்பான அரசு தீர்மானத்தை முன்மொழிந்து முதல்வர் நாராயணசாமி பேசியதாவது: புதுச்சேரி வழியாக ஓடுகின்ற ஆறுகளின் குறுக்கே தடுப்பணைகள் கட்டப்பட்டு, நிலத்தடி நீர் மட்டம் உயர்வதற்கு ஆவண செய்யப்பட்டுள்ளது. சங்கராபரணி ஆற்றின் குறுக்கே செட்டிப்பட்டு கிராமத்தில் ரூ.7 கோடி செலவில் புதிய அணை கட்டப்பட்டு வருகிறது. இதே ஆற்றின் குறுக்கே, ரூ.40 கோடி செலவில் செல்லிப்பட்டு, கோனேரிக்குப்பம் கிராமத்தில் இரண்டு புதிய தடுப்பணைகள் கட்டுவதற்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த மேற்படிப்பு நீர் மேலாண்மை புத்துணர்வு அளிக்கும் மத்திய அரசின் திட்டத்தின் கீழ், 25 ஏரிகளையும், 32 குளங்களையும் துார் வாருவதற்கு 16 கோடி ரூபாய்க்கு மதிப்பீடு தயாரிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது. இதற்கான முதல் தவணையாக, 3.86 கோடி ரூபாய் மத்திய அரசால் விடுவிக்கப்பட்டு, பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நாட்டில் முதல் முறை


கட்டடங்கள், தனியார் தொழிற்சாலைகள் மற்றும் அனைத்து வீடுகளிலும் மழைநீர் சேகரிப்புத் தொட்டி அமைக்க வேண்டும் என்று அரசு வலியுறுத்தி வருகிறது. நீரின் அத்தியாவசியமான தேவையை உணர்ந்து, 'புதுச்சேரி நிலத்தடி நீர் (கட்டுப்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டம்-2002' என்ற சட்டத்தை, கடந்த 2003ம் ஆண்டு, இந்தியாவிலேயே முதல் முறையாக புதுச்சேரி அரசு அமல்படுத்தியது. இந்த சட்டத்தின்படி, நிலத்தடி நீரை வெளி கொணர்வதை ஒழுங்குமுறைப்படுத்தும் வகையில், கடற்கரையில் இருந்து 6 கி.மீ., தொலைவிற்குள் எந்த ஒரு புதிய குழாய் கிணற்றையும் அமைப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

நாளொன்றுக்கு, 10 ஆயிரம் லிட்டருக்குமேல் நீர் தேவைப்படும் எந்த ஒரு தொழிற்சாலைக்கும் கடற்கரையில் இருந்து 6 கி.மீ., தொலைவிற்குள் அனுமதி அளிக்கப்படுவதில்லை.
காரைக்கால், மாகி, ஏனாம் பகுதிகளிலும் நீர் நிலைகளை பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. தண்ணீரை சார்ந்த தொழிற்சாலைகளான மினரல் வாட்டர் உற்பத்தி, குளிர்பான தொழிற்சாலைகளை புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அமைப்பது முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது.

யூனியன் பிரதேசத்தின் நிலத்தடி நீர் வளத்தை பாதுகாக்கும் பொருட்டும், தண்ணீர் மேலாண்மைக்காகவும், இங்குள்ள அரசு நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள், தொழிற்சாலைகள், வியாபாரிகள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் தண்ணீரை வீணாக்காமல் சிக்கனமாக பயன்படுத்தும்படியும், தண்ணீரை சேமிப்பதற்கும், பாதுகாப்பதற்கும் அனைவரும் ஒத்துழைக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். புதுச்சேரி நீர் மேலாண்மைக்கும், நீர்வளப் பாதுகாப்பிற்கும் கூடுதல் நிதி வழங்குமாறு மத்திய அரசை புதுச்சேரி சட்டசபை கேட்டுக் கொள்கிறது என்ற அரசின் தீர்மானம் முன்மொழியப்பட்டது. இந்த தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்தில் அனைத்து கட்சி எம்.எல்.ஏ.,க்களும், அமைச்சர்களும் பேசினர்.

முதல்வர் பளீச்


தீர்மானத்துக்கு பதிலளித்து முதல்வர் நாராயணசாமி பேசும்போது, 'புதுச்சேரி மாநிலத்தில் நீர் நிலைகளை பாதுகாப்பது அரசின் கடமை. அதிகப்படியாக நிலத்தடி நீரை உறிஞ்சினால் வருங்கால சந்ததியினர் பாதிக்கப்படுவர். இதை, பொதுமக்களும் உணர வேண்டும். துார்வாரும் பணியில் அரசு மட்டுமே ஈடுபட்டால் போதாது. நெட்டப்பாக்கம் அருகே கரியமாணிக்கம் கிராமத்தில் ஊர்மக்களே திரண்டு குளத்தை துார் வாரினர். இதை, அனைத்து கிராமத்தினரும் உணர வேண்டும். மழை என்பது பூமிக்கு கொடுக்கும் கொடை. அந்த நீர் வீணாக கடலுக்கு செல்கிறது.

இதை தடுக்க புதுச்சேரியில் தடுப்பணை கட்டும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இன்னும் பல இடங்களில் கட்ட வேண்டியுள்ளது. நமக்கு கிடைக்கும் தண்ணீரில் 70 சதவீதம் விவசாயத்திற்கும், 10 சதவீதம் தொழிற்சாலைகளும், 20 சதவீதத்தை நாம் குடிநீர் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக பயன்படுத்தி வருகிறோம். வடகிழக்கு பருவமழை மட்டுமே நமக்கு நீராதாரம். எனவே தண்ணீரை சேமிக்க வேண்டியது அவசியம். எனவே, நிலத்தடி நீர் மேம்பாட்டிற்காக புதுச்சேரிக்கு ரூ.1,336 கோடியும், காரைக்காலுக்கு ரூ. 1,382 என, மொத்தம் ரூ. 2,718 கோடிக்கு திட்டம் தயாரித்து, மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், அதில், மத்திய அரசு நமக்கு ரூ.2 கோடி மட்டுமே கொடுத்தது.

மத்திய அரசு, 2019-2020 ம் ஆண்டில் நீர்வள மேம்பாட்டிற்கு ரூ. 20 ஆயிரம் கோடியை ஒதுக்கியுள்ளது. தனி அமைச்சகம் ஏற்படுத்தப்பட்டு, அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளார். எனவே, அத்திட்டத்தில் புதுச்சேரிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என கேட்டும், கடந்த ஆண்டு அனுப்பிய திட்டத்துக்கு நீர்வள மேம்பாட்டு திட்டத்தின்படி நிதி ஒதுக்க கேட்டும், மீண்டும் கோப்பு மத்திய அரசுக்கு அனுப்பட்டுள்ளது. மத்திய நீர்வளத்துறை அமைச்சரை நேரடியாக சந்தித்து, திட்டத்தை பெற நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார். இதைதொடர்ந்து, இந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

மூலக்கதை