மல்லையாவுக்கு எதிராக புதிய வழக்கு

தினமலர்  தினமலர்
மல்லையாவுக்கு எதிராக புதிய வழக்கு


லண்டன்:வங்கி மோசடி வழக்கில் ஐரோப்பிய நாடான பிரிட்டனுக்கு தப்பிச் சென்றுள்ள தொழிலதிபர் விஜய் மல்லையா தன் சொத்து விபரங்களை தாக்கல் செய்ய உத்தரவிடக் கோரி அந்த நாட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.


கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் விஜய் மல்லையா பல்வேறு வங்கிகளில் 9000 கோடி ரூபாய் கடன் மோசடி செய்துள்ளதாக வழக்குகள் தொடரப்பட்டன. அதையடுத்து ஐரோப்பிய நாடான பிரிட்டனின் லண்டனுக்கு அவர் தப்பிச் சென்றார்.அவரை நாடு கடத்தி அழைத்து வருவதற்காக மத்திய அரசு தொடர்ந்த வழக்கு லண்டன் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்தியாவில் உள்ள மல்லையாவுக்கு சொந்தமான பல்வேறு சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.இந்நிலையில் அவருக்கு சொந்தமான சொத்து விபரங்களை தெரிவிக்க உத்தரவிடும்படி லண்டன் நீதிமன்றத்தில் வங்கிகள் கூட்டமைப்பு சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அதன் விபரம்:மல்லையாவின் தந்தை விட்டல் மல்லையாவின் பெயரில் உள்ள அறக்கட்டளைக்கு பல்வேறு சொத்துக்கள் உள்ளன. சொகுசு கப்பல் உட்பட ஏலத்தில் எடுக்கப்பட்ட பல்வேறு விலைமதிப்பு மிக்க பொருட்களை இந்த அறக்கட்டளையின் பெயரில் விஜய் மல்லையா வாங்கியுள்ளார்.ஆனால் அந்த அறக்கட்டளைக்கும் தனக்கும் தொடர்பு இல்லை என மல்லையா கூறி வருகிறார். எனவே தன் சொத்து விபரங்களை வெளியிட வேண்டும் என அவருக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை