இம்ரான் கானை வரவேற்க ஆளில்லை

தினமலர்  தினமலர்
இம்ரான் கானை வரவேற்க ஆளில்லை


வாஷிங்டன்: அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்ற பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை, அந்நாட்டு அதிகாரிகள் யாரும் வரவேற்கவில்லை.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், மூன்று நாள் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அவருடன், பாக்., ராணுவ தளபதி, கமர் ஜாவித் பஜ்வா, அந்நாட்டு உளவு அமைப்பான, ஐ.எஸ்.ஐ.,யின் தலைவர், பைஸ் அகமதுவும் உடன் சென்றனர். நேற்று(ஜூலை 20) அமெரிக்கா வந்தடைந்த இம்ரான் கானை, வரவேற்க, அமெரிக்க அதிகாரிகள் ஒருவர் கூட வரவில்லை. பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மெகமூத் குரேஷி மற்றும் அமெரிக்காவில் வசிக்கும் பாகிஸ்தானியர்கள் மட்டுமே இம்ரான் கானை வரவேற்றனர்.நிதி நெருக்கடி காரணமாக, கத்தார் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தில் இம்ரான் வந்தடைந்தார். விமான நிலையத்தில் இருந்து, தங்க உள்ள இடத்திற்கு இம்ரான் கான் மெட்ரோ ரயில் மூலம் பயணித்தார்.


அமெரிக்காவில், ஓட்டலில் தங்குவதால் ஆகும் பெரும் செலவை குறைக்கும் வகையில், அமெரிக்காவிற்கான பாகிஸ்தான் தூதர் ஆசாத் மஜீத் கான் வீட்டில் இம்ரான் கான் தங்குகிறார்.
நாளை(ஜூலை 22) அமெரிக்க அதிபர் டிரம்ப்பை, இம்ரான் கான் சந்திக்க உள்ளார். அப்போது, பயங்கரவாதம் மற்றும் பயங்கரவாத குழுக்களுக்கு எதிராக ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை பாகிஸ்தான் எடுக்க வேண்டும் என இம்ரான் கானிடம், டிரம்ப் வலியுறுத்துவார் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் பின்னர், வாஷிங்டன்னில் தங்கியிருக்கும் இம்ரான் கான், சர்வதேச நிதியம்(ஐஎம்எப்) தலைவர் டேவிட் லிப்டான் மற்றும் உலக வங்கி தலைவர் டேவிட் மல்பாசை சந்திக்க உள்ளார். இதன் பின்னர் ஜூலை 23 அன்று, அமெரிக்காவில் வசிக்கும் பாகிஸ்தானியர்கள் மத்தியில் பேசும் இம்ரான் கான், தொடர்ந்து அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோவை சந்திக்கிறார்.

மூலக்கதை