மேடையில் மயங்கி விழுந்து உயிரிழந்த 'காமெடியன்'

தினமலர்  தினமலர்
மேடையில் மயங்கி விழுந்து உயிரிழந்த காமெடியன்

துபாய்:இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, காமெடி நிகழ்ச்சியாளர், துபாயில், நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோது, ரசிகர்கள் முன்னிலையில், மயங்கி விழுந்து, உயிரிழந்தார்.
ஆந்திர மாநிலத்தை பூர்வீகமாக உடையவர், மஞ்சுநாத் நாயுடு, 36. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் வசித்து வந்தார். அங்கு, காமெடி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார்.துபாயில், 19ம் தேதி நடந்த ஒரு நிகழ்ச்சியில், அவர் பங்கேற்றார். பல நகைச்சுவையான விஷயங்களை பேசியும், கிண்ட லடித்தும், ரசிகர்களை சந்தோஷப்படுத்தினார். அப்போது, மன உளைச்சல் தொடர்பாக பேசிய அவர், மேடையில் இருந்த நாற்காலியில் அமர்ந்தார்.சிறிது நேரத்தில், நாற்காலியில் இருந்து மயங்கி கீழே விழுந்தார். பார்வையாளர்கள், அவர், காமெடி செய்கிறார் என, நினைத்திருந்தனர்.நீண்ட நேரமாக, அவர் எழுந்திருக்காததால், பதற்றமடைந்த, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், மருத்துவமனையில் சேர்த்தனர். அவர், மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து, அவரது நண்பர்கள் கூறுகையில், 'மஞ்சு நாயுடுவின், தாய், தந்தை ஏற்கனவே இறந்து விட்டனர். சகோதரருடன் வசித்து வந்தார். 'காமெடி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை, முழு நேர வேலையாகக் கருதி செய்து வந்தார்' என்றனர்.

மூலக்கதை