‘ஐசிசி பிரபலம்’ சச்சினுக்கு கவுரவம்!

தினகரன்  தினகரன்
‘ஐசிசி பிரபலம்’ சச்சினுக்கு கவுரவம்!

மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டாலும், அவரது சாதனைகள் இளம் வீரர்களுக்கு ஒரு முன்னுதாரணமாகவும் ஊக்கசக்தியாகவும் விளங்குவதுடன் அவற்றை முறியடிக்க வேண்டும் என்ற முனைப்பையும் கொடுத்துக் கொண்டு தான் இருக்கின்றன. டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன் குவித்த வீரர், 100 சர்வதேச சதங்களை விளாசியவர் உட்பட பல்வேறு சாதனைகளைக்கு சொந்தக்காரரான சச்சின், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ‘ஹால் ஆப் பேம்’ பிரபலங்கள் வரிசையில் இணைந்துள்ளார். சச்சினுடன் தென் ஆப்ரிக்க அணி முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் ஆலன் டொனால்டு, ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி முன்னாள் வேகம் கேத்ரின் லொரைன் பிட்ஸ்பேட்ரிக் ஆகியோருக்கும் இந்த கவுரவம் வழங்கப்பட்டுள்ளது. லண்டனில் நடந்த வண்ணமயமாக நிகழ்ச்சியில் மூவரும் ‘ஹால் ஆப் பேம்’ விருது வழங்கி கவுரவிக்கப்பட்டனர். இந்நிகழ்ச்சியில் சச்சின் தனது குடும்பத்தினருடன் பங்கேற்ற புகைப்படங்களை ஐசிசி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது. இந்த கவுரவத்தைப் பெறும் 6வது இந்திய வீரர் சச்சின் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக சுனில் கவாஸ்கர், பிஷன் சிங் பேடி, கபில் தேவ், அனில் கும்ப்ளே, ராகுல் டிராவிட் ஆகியோர் ஐசிசி பிரபலங்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளனர்.

மூலக்கதை