சந்திரனை தொட்ட 'மந்திரன்' நிலவில் காலடி வைத்த 50வது ஆண்டு

தினமலர்  தினமலர்
சந்திரனை தொட்ட மந்திரன் நிலவில் காலடி வைத்த 50வது ஆண்டு

நிலவைக் காண்பித்து குழந்தைக்கு உணவு ஊட்டிய காலம் போய், இன்று நிலவுக்கே சென்று குடியேறும் அளவுக்கு விண்வெளி ஆய்வு வளர்ச்சி அடைந்துள்ளது. இதற்கு அடித்தளமிட்டவர் நீல் ஆம்ஸ்டிராங். இவர்தான் நிலவில் முதன்முதலில் காலடி எடுத்து வைத்தவர். இச்சாதனை நிகழ்த்திய 50வது ஆண்டு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இருந்து 'நாசா' விண்வெளி மையத்தின் சார்பில் 1969 ஜூலை 16ல் அப்பல்லோ- 11 என்ற விண்கலம் நிலவுக்கு பயணமானது. இதில் கமாண்டர் நீல் ஆம்ஸ்டிராங், பைலட் மைக்கேல் கோலின்ஸ் மற்றும் பைலட் எட்வின் ஆல்ட்ரின் ஆகிய மூன்று விண்வெளி வீரர்கள் பயணித்தனர்.இந்த விண்கலம் ஜூலை 20ல் (இந்திய நேரம் நள்ளிரவு 12.48 மணிக்கு) நிலவில் இறங்கியது. 6 மணி நேரம் கழித்து நீல் ஆம்ஸ்டிராங், விண்கலத்தில் இருந்து இறங்கி நிலவில் காலடி வைத்தார். இதன் அடையாளமாக அமெரிக்காவின் தேசியக் கொடியையும் நிலவில் பறக்க விட்டார். 20 நிமிடம் கழித்து எட்வின் ஆல்ட்ரின் நிலவில் இறங்கினார். விண்வெளியில் வீரர்கள் தங்களின் உணவுக்கு பன்றி இறைச்சி, சுகர் குக்கீஸ், அன்னாசி பழம், திராட்சை ஜூஸ், காபி எடுத்துக்கொண்டனர்.
மூன்று பேர்
● நீல் ஆம்ஸ்டிராங் 1930 ஆக., 5ல் பிறந்தார். பி.எஸ்., (ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங்), எம்.எஸ்., (ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங்) படித்தவர். 2012 ஆக., 5ல் மறைந்தார்.● எட்வின் ஆல்ட்ரின் 1930 ஜன., 20ல் பிறந்தார். இவரும் பி.எஸ்., பட்டதாரி. நிலவில் இறங்கிய இரண்டாவது மனிதன்.● மைக்கேல் கோலின்ஸ் 1930 அக்., 31ல் இத்தாலியில் பிறந்தார். பி.எஸ்., பட்டதாரி. நிலவு பயணத்துக்கு பின் அமெரிக்காவின் 'நேஷனல் ஏர் அண்ட் ஸ்பேஸ் மியூசிய நிர்வாக இயக்குனராக பணியாற்றினார்.3.84பூமியில் இருந்து 3.84 லட்சம் கி.மீ., துாரம் கடந்து 76 மணி நேரத்தில் நிலவை விஞ்ஞானிகள் அடைந்தனர்.6அப்பல்லோ - 11 விண்கலத்தை தயாரிக்க 6 ஆண்டுகள் ஆனது.1.74இதற்கான செலவு ரூ. 1.74 லட்சம் கோடி.


மூலக்கதை