பாகிஸ்தான் சிறையில் வாடும் குல்பூஷன் ஜாதவை சந்திக்க இந்திய தூதரக அதிகாரிகளுக்கு பாகிஸ்தான் அனுமதி

தினகரன்  தினகரன்
பாகிஸ்தான் சிறையில் வாடும் குல்பூஷன் ஜாதவை சந்திக்க இந்திய தூதரக அதிகாரிகளுக்கு பாகிஸ்தான் அனுமதி

இஸ்லாமாபாத் ; பாகிஸ்தான் சிறையில் வாடும் குல்பூஷன் ஜாதவை சந்திக்க இந்திய தூதரக அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச நீதிமன்றத்தில் தீர்ப்பை அடுத்து பாகிஸ்தான் அரசு இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளது. குல்பூஷன் ஜாதவின் மரண தண்டனையை நிறுத்தி வைக்க உத்தரவு இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷன் ஜாதவ் (49), கடந்த 2017ம் ஆண்டு ஈரான் சென்றிருந்தார். அவர் பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பகுதிக்கு கடத்திச் செல்லப்பட்டு கைது செய்யப்பட்டார். அவர், பாகிஸ்தானில் உளவு பார்த்ததாகவும், தீவிரவாத சதிச் செயலில் ஈடுபட்டதாகவும் குற்றம் சுமத்தியது பாகிஸ்தான். அவருக்கு இந்திய தூதரக உதவிகள் கிடைக்கவும் அனுமதிக்கவில்லை. இந்த வழக்கில் அவருக்கு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இதை எதிர்த்து, நெதர்லாந்து நாட்டின் தி ஹாக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா வழக்கு தொடர்ந்தது. அதில், வியன்னா ஒப்பந்தப்படி, குல்பூஷன் ஜாதவை இந்திய தூதரகம் அணுக பாகிஸ்தான் மறுப்பு தெரிவித்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில் இருதரப்பு வாதங்களையும் கேட்ட சர்வதேச நீதிமன்ற தலைமை நீதிபதி அப்துல் குவாவி அகமது யூசப் தலைமையிலான 15 நீதிபதிகள் கொண்ட அமர்வு, நேற்று முன்தினம் தீர்ப்பளித்தது.அதில், ‘வியன்னா விதிமுறைகளை பாகிஸ்தான் மீறியுள்ளது. குல்பூஷன் ஜாதவின் மரண தண்டனையை பாகிஸ்தான் நிறுத்தி வைக்க வேண்டும். அவருக்கு இந்தியாவின் தூதரக உதவிகள் கிடைக்க அனுமதிக்க வேண்டும். குல்பூஷன் ஜாதவுக்கு அளிக்கப்பட்ட தண்டனை பாகிஸ்தான் கட்டாயம் தீவிரமாக மறுபரிசீலனை செய்ய வேண்டும்,’ என உத்தரவிட்டது.இந்திய தூதரக அதிகாரிகளுக்கு அனுமதிஇதையடுத்து பாகிஸ்தான் சிறையில் வாடும் குல்பூஷன் ஜாதவை சந்திக்க இந்திய தூதரக அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் இன்று  குல்பூஷன் ஜாதவை சந்திப்பார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் வியன்னா ஒப்பந்தப்படி தூதரக அதிகாரிகள் சந்திக்க அனுமதிப்பது தொடர்பான உரிமைகள் குல்பூஷன் ஜாதவிற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. முன்னதாக கடந்த 2017ம் ஆண்டு டிசம்பரில்  குல்பூஷன் ஜாதவை அவரது மனைவியும் தாயாரும் கடும் கட்டுப்பாடுகளுடன் சந்திக்க பாகிஸ்தான் அரசு அனுமதித்தது. அதன்பிறகு  குல்பூஷன் ஜாதவின் நிலை குறித்து வெளியுலகிற்கு ஏதும் தெரியாது. குல்பூஷன் ஜாதவ் வழக்கு சிவிலியன் நீதிமன்றத்தில் விசாரிக்க வலியுறுத்தல் இந்நிலையில் பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணை நடத்தினால்,  குல்பூஷன் ஜாதவிற்கு நியாயம் கிடைக்காது என்று காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசிதரூர் அச்சம் தெரிவித்துள்ளார். இதையடுத்து பாகிஸ்தானில் குல்பூஷன் ஜாதவின் மீது நிலுவையில் உள்ள வழக்கை ராணுவ நீதிமன்றத்தில் அல்லாமல் சிவிலியன் நீதிமன்றத்தில் விசாரிக்கச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. சிறை கைதிகள் தொடர்பாக வியன்னா  ஒப்பந்தத்தை பாகிஸ்தான் தொடர்ந்து மீறுவதாக மத்திய அரசு குற்றம் சாட்டியுள்ளது. 

மூலக்கதை