குடிநீர், சுகாதாரத்தில் 'மாஸ்' காட்டணும் 'ஸ்மார்ட்' ஆகிறது அவிநாசி!

தினமலர்  தினமலர்
குடிநீர், சுகாதாரத்தில் மாஸ் காட்டணும் ஸ்மார்ட் ஆகிறது அவிநாசி!

அவிநாசி:மத்திய அரசின், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், பேரூராட்சி பகுதி களில் மேற்கொள்ள வேண்டிய விஷயங்கள் குறித்து விளக்கப்பட்டது.திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, 16 பேரூராட்சிகளில், அவிநாசி, குன்னத்துார், தளி பேரூராட்சிகளை 'மாதிரி பேரூராட்சி' (ஸ்மார்ட் பேரூராட்சி) திட்டத்தின் கீழ் கொண்டு வர, அந்தந்த பேரூராட்சி சார்பில், அனுமதி கேட்டு, மத்திய, மாநில அரசுகளுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, ஈரோடு மண்டல பேரூராட்சிகளின் நிர்வாகம் சார்பில், பேரூராட்சியில் பணிபுரியும் பரப்புரையாளர்கள், சுகாதாரப்பணியாளர், சுய உதவிக்குழுவினர், குழாய் பொருத்துனர் மற்றும் பம்ப் மெக்கானிக் ஆகியோருக்கான கடமை, பொறுப்பு குறித்த, விழிப்புணர்வு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.நேற்று, அவிநாசி பேரூராட்சி பணியாளர்களுக்கான பயிற்சி, கைகாட்டிபுதுாரில் உள்ள சமுதாயக்கூடத்தில் நடந்தது.செயல் அலுவலர் ஈஸ்வரமூர்த்தி, துவக்கி வைத்தார். துப்புரவு ஆய்வாளர் கருப்புசாமி, மேற்பார்வையாளர் பாலு, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.அரசின் சார்பில், கருத்தாளராக பங்கேற்ற, டாக்டர் கென்னடி, பயிற்சி வழங்கினார். இதில், மாதிரி பேரூராட்சியாக இருக்க அறிவுறுத்தப்பட்ட விஷயங்கள்: வீட்டுக்குடிநீர் குழாய் இணைப்புகள் உள்ள குழிகள் மூடப்பட்டு, இணைப்புகள் சரியான முறையில் இருக்க வேண்டும்; குழாய் பதிக்கப்பட்ட குழிகள், மூடப்படாமல் இருக்கக்கூடாது. பொதுகுடிநீர் குழாய்களில், குடிநீர் வினியோகத்தை கட்டுப்படுத்தும் 'வால்வு' பொருத்தப்பட்டிருக்க வேண்டும்; தெருக்களில், கால்வாய் அமைக்கப்பட வேண்டும். அனைத்து வீடுகளுக்கான குடிநீர் இணைப்புக்குரிய வைப்புத்தொகை, முழுமையாக வசூல் செய்யப்பட வேண்டும்.
பயனாளிகள், மாதந்தோறும் தங்கள் குடிநீர் கட்டணத்தை செலுத்த வேண்டும்; பேரூராட்சி நிர்வாகம் சார்பில், குடிநீர் கட்டண அட்டை வழங்கப்பட வேண்டும். அனைத்து வீடுகளிலும், தனிநபர் கழிப்பறை, கட்டாயம் இருக்க வேண்டும். பெண்கள் பயன்படுத்தும், நாப்கின்கள் பயன்பாட்டுக்கு பின், பாதுகாப்பாக அப்புறப்படுத்த வேண்டும்.
வீடுதோறும் மரக்கன்று நட, மக்கள் முயற்சி எடுக்க வேண்டும்; பேரூராட்சியில், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்குழு ஏற்படுத்தப்பட வேண்டும். வீடுகளில் இருந்து வெளியேறும் குப்பையை, மக்கும் மற்றும் மக்காத குப்பையாக தரம் பிரித்து, மக்கும் குப்பையில் இருந்து, இயற்கை உரம் தயாரிக்க வேண்டும். இயற்கை உரம் தயாரிக்கும் இடம், பூங்கா போன்று பராமரிக்கப்பட வேண்டும்.
வீதி, தெருக்களில் திறந்தவெளியில் கழிவுநீர் கால்வாய் ஓடுவது, தவிர்க்கப்பட வேண்டும். அனைத்து தெருவிளக்கு கம்பங்களிலும், எல்.இ.டி., விளக்கு பொருத்தப்பட வேண்டும். அனைத்து வார்டுகளிலும், படிப்பகம் அல்லது நுாலகம் செயல்பட வேண்டும். குடிநீர் மற்றும் சுகாதாரக்குழு, குடிநீர் பயனாளிகள் குழு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் கல்விக்குழு, சுய உதவிக்குழு அமைக்கப்பட்டு, அந்தந்த பணி சார்ந்த மேம்பாட்டு பணி மேற்கொள்ள வேண்டும்.மாதிரி பேரூராட்சியாக அறிவித்தால், இவை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும்; அதற்கு, தற்போதே, ஆயத்தமாக வேண்டும்.இவ்வாறு, பயிற்சி முகாமில் தெரிவிக்கப்பட்டது.

மூலக்கதை